குடியுரிமை மசோதாவிற்கு வலுக்கும் எதிர்ப்பு; களத்தில் குதித்த லயோலா ஐஐடி மாணவர்கள்

Arun Prasath

திங்கள், 16 டிசம்பர் 2019 (13:15 IST)
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லி மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து சென்னை ஐஐடி மற்றும் லயோலா மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைகழக மாணவர்கள் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து போராட்டம் நடத்தினர். இதில் மாணவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டத்தில் வன்முறை வெடித்தது.

வன்முறையில் 3 பஸ்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டது. பின்பு போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை வீசியும் வன்முறையில் ஈடுபட்டவர்களை கலைத்தனர்.

இதனை தொடர்ந்து, இரவில் போராட்டக்காரர்கள் போலீஸார் மீது கல்வீசியதாக கூறப்படுகிறது. பின்பு பல்கலைகழக வளாகத்திற்குள் போலீஸார் நுழைந்தனர். இதில் 6 பேர் காயம் அடைந்தனர்.

இதனையடுத்து ஜாமியா பல்கலைகழகத்தில் மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து, அலிகார் முஸ்லிம் பல்கலைகழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதில் போலீஸாருடன் கைகலப்பு ஏற்பட்டு, மாணவர்கள் கற்களை கொண்டு தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகளையும், தண்ணீரையும் பீய்ச்சி அடித்து மாணவர்களை கலைத்தனர். இதனை தொடர்ந்து ஜனவரி 5 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக பல்கலைகழகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் ஜாமியா மற்றும் அலிகார் மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு சென்னை ஐஐடி மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை போலவே சென்னை லயோலா கல்லூரி மாணவர்களும் டெல்லி மாணவர்கள் தாக்கப்பட்டதையும், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவையும் எதிர்த்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்