ஜல்லிக்கட்டிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட வேண்டும், மேலும் பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என சென்னையை சேர்ந்த இளைஞர்கள் மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்திய போது, நடிகர் ராகவா லாரன்ஸ் தன்னை இணைத்துக் கொண்டார். உடல் நலம் குன்றிய நிலையிலும் தொடர்ந்து மாணவர்களுடனேயே தங்கி போராட்டத்தில் பங்கேற்றார். மாணவர்கள் உணவு உள்ளிட்ட தேவைகளுக்காக ரூ.1 கோடி வரை தருவதாகவும் கூறினார்.
இந்நிலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த லாரன்ஸ் பேசியபோது, தேவைபட்டால் மாணவர்கள் உதவியுடன் அரசியலுக்கு வரத் தயார் என்றும், என் மனைவியின் நகைகளை அடகு வைத்து மாணவர்களுக்கு செலவு செய்தேன் என்றும் கூறினார்.
இவரது இந்த பேட்டி மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த பேட்டி குறித்து மாணவர்கள் கூறியபோது, நடிகர் லாரன்ஸை போன்று சோறு போட்டேன் சோறு போட்டேன் என்று ஊடகத்தில் முன் யாரும் சொல்லவில்லை. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் 3ம் நாள் லாரன்ஸ் உள்ளே வந்தபின்பு போராட்ட களம் முழுவதும் அவர் கட்டுப்பாட்டுக்கு சென்றது. ஆனாலும் அதனை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் மனைவியின் நகையை அடகு வைத்து எங்களுக்கு சோறு போட்டேன் என்று லாரன்ஸ் கூறுவது அசிங்கமாக உள்ளது என்று மாணவர்கள் வேதனை அடைந்ததாக கூறப்படுகிறது.