ஒரத்தநாடு அரசு கால்நடை மருத்துவமனையில் படித்து வருபவர் இந்துமதி எனும் மாணவி. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மாணவி இவர் ஹாஸ்டலில் தங்கி படித்து வந்தார். இவர் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் போன்ற சமூகவலைதளங்களில் மிகவும் தீவிரமாக இருந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு சதீஷ் எனும் வாலிபரோடு பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியுள்ளது. இருவரும் வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோருக்கு தெரியாமல் இருவரும் ஒரத்தநாட்டில் அறை எடுத்துத் தங்கி வாழ்ந்து வந்துள்ளனர். வீட்டில் பெற்றோரிடம் ஹாஸ்டலில் தங்கி படிப்பதாக சொல்லி சதீஷ் குமாரோடு வாழ்ந்துள்ளார்.
ஆனால் ஒன்றாக வாழத்தொடங்கிய சில நாட்களிலேயே இருவருக்கும் இடையில் பிரச்சனைகள் ஆரம்பித்துள்ளன. இன்ஜீனியர் என சொல்லிக்கொண்ட சதீஷ் எலக்ட்ரீசியன் என்பதும் குடி அடிமை என்பதும் தெரிய இந்துமதி கோபமாகியுள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. ஆனால் சதீஷ் குடிப்பதை நிறுத்தாமல் வேலைக்கும் செல்லாமல் இருந்துள்ளார். இதனால் ஒருகட்டத்தில் மனம் வெறுத்த இந்துமதி தனிமையில் இருக்கும் போது தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.