இந்தியாவில் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளுக்காக தயாரிக்கப்படும் பட்டாசுகளில் 90 சதவீதம் சிவகாசியில் இருந்துதான் உற்பத்தியாகிறது. இந்நிலையில் தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதற்கு கொரோனா காரணமாக ராஜஸ்தான், ஒடிசா மாநிலங்கள் தடை விதித்துள்ளன. இதனால் சிவகாசி பட்டாசு விற்பனை பெருமளவில் பாதிக்கப்படும் என்று நிலைமையை வலியுறுத்த்தி தடையை நீக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி ராஜஸ்தான், ஒடிசா முதல்வர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் காற்று மாசுபாடு காரணமாக டெல்லியிலும், தற்போது சண்டிகரிலும் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பெருமளவில் பாதிக்கப்பட்ட சிவகாசி பட்டாசு ஆலை ஊழியர்கள் தீபாவளிக்கு பட்டாசு விற்பனை பெரிய அளவில் நடக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் தொடர்ந்து தடைகள் விதிக்கப்பட்டு வருவது அதிர்ச்சியை அளித்துள்ளது. இதனால் தயாரித்த பட்டாசுகளை விற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக சிவகாசி பட்டாசு ஆலை உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.