இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சித்ரவதை கூடம் இனப்படுகொலைக்கு மேலும் ஒரு ஆதார சாட்சி: வைகோ

வியாழன், 19 நவம்பர் 2015 (14:50 IST)
இலங்கை இனப்படுகொலைக்கு மேலும் ஒரு ஆதார சாட்சியாக அங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள சித்ரவதை கூடம் இருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.


 

 
இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
இலங்கைத் தீவில் காணாமல் போனவர்கள் குறித்து விசாரிப்பதற்காகச் சென்ற ஐ.நா வின் விசாரணைக்குழு நேற்று வெளியிட்டு இருக்கின்ற அறிக்கையில் கிழக்கு மாகாணத்தில் திரிகோண மலை கடற்படைத்தளத்தில் சித்ரவதைக் கூடங்கள் இருந்தன.
 
2010 க்குப் பிறகும் ஈழத்தமிழர்கள் அங்கு தொடர்ந்து சித்ரவதை செய்யப்பட்டதை நிரூபிப்பதற்குப் போதிய ஆதாரங்கள் உள்ளன. சுவர்களில் படிந்துள்ள இரத்தக்கறைகள், கைரேகைகள், ஈழத்தமிழர்கள் தொடர்ந்து அந்த அறைகளில் சித்ரவதை செய்யப்பட்டு இருக்கின்றார்கள்.
 
இதுபோல இன்னும் பல இடங்களில் சித்திரவதை முகாம்கள் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளன என்றும், அந்தக் குழு தெரிவித்து இருக்கின்றது.
 
இலங்கைத் தீவில் இனப்படுகொலை தொடர்ந்து நடைபெறுகிறது என்பதற்கு மேலும் ஒரு ஆதார சாட்சியாக மூவர் குழுவின் தகவல்கள் அமைந்துள்ளன.
 
கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையா? இலங்கைக் கொலைக்களத்திற்கு ஆதாரங்களைத் தேட வேண்டுமா?
 
இலங்கைத் தீவில் ஈழத்தமிழர்கள் படுகொலை குறித்து சுதந்திரமான பன்னாட்டுப் புலன் விசாரணையும், நீதி விசாரணையும்தான் உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வர முடியும் என்று நாம் தொடர்ந்து கோரி வந்த போதிலும், கொலைகார சிங்கள அரசைப் பாதுகாக்கும் நோக்கத்தில் அந்த இனக்கொலைகள் 2008–09 ல் நடைபெற்ற இனக்கொலைக்குக் கூட்டுக் குற்றவாளியாக இருந்த இந்திய அரசு இன்றளவில் அதே அடிப்படையில் செயல்பட்டு வருவதற்குக் கண்டனம் தெரிவிப்பதோடு, உலகெங்கும் வாழும் தமிழர்கள், நீதி கிடைக்கவும், விடியல் காணவும் தொடர்ந்து அந்தந்த நாடுகளிலும் அறப்போராட்டங்கள் மூலம் அழுத்தம் தர வேண்டியது முக்கியமான கடமை என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் வைகோ கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்