கண்டுபிடித்த வண்டியை திரும்ப கேட்டால் லஞ்சம் - காவல் ஆய்வாளர் கைது

வெள்ளி, 8 ஜூலை 2016 (20:37 IST)
அருப்புக்கோட்டையில்  காணாமல் போன வண்டியை திரும்ப கேட்டதற்கு லஞ்சம் வாங்கிய சிறப்பு சார்பு ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.
 

 
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையை அடுத்த பாலையம்பட்டி மேலத் தெருவைச் சேந்தவர் பாஸ்கரன்(51). இவரது சரக்கு வாகனம் (டாடா ஏஸ்) ஒன்று கடந்த ஜூன் 20 இல் பாலையம்பட்டியில் காணாமல் போனது.
 
எனவே, அதை கண்டுபிடித்து தரக்கோரி பாஸ்கரன் அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் வண்டியை தேடி வந்தனர்.
 
இந்நிலையில், வத்தலகுண்டு அருகே அந்த சரக்கு வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது. பின்பு, அந்த வாகனத்தை அருப்புக்கோட்டை நகர் காவல்நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இதையடுத்து, பாஸ்கரன் வண்டியை எடுப்பதற்காக காவல் நிலையம் சென்றார். அங்கிருந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் ராஜேந்திரன் (52), வண்டியை திரும்பத் தர ரூ. 7 ஆயிரம் லஞ்சம் வேண்டும் என்றாராம்.
 
இந்நிலையில், லஞ்சம் தர மனமில்லாத பாஸ்கரன், இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு காவல் துறையிடம் புகார் செய்தார். இதையடுத்து, ரசாயன பவுடர் தடவப்பட்ட ரூபாய் தாள்களை பாஸ்கரனிடம் கொடுத்துஅனுப்பினர். அந்த பணத்தை பெற்றுக் கொண்ட பாஸ்கரன், அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்திற்கு சென்று சிறப்பு சார்பு ஆய்வாளரிடம் பணத்தை கொடுத்தார்.
 
அப்போது, அங்கு மறைந்திருந்த மதுரை லஞ்ச ஒழிப்பு காவல் துணை கண்காணிப்பாளர் பாண்டியராஜன், ஆய்வாளர்கள் விஜயகாண்டீபன், பூமிநாதன் உள்ளிட்ட காவல்துறையினர் சுற்றி வளைத்து அவரை கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்