தமிழ் உணர்வாளர்கள் என்ற பெயரில் சிலர் அரசியல் செய்கிறார்கள் - ஞானதேசிகன்

வெள்ளி, 25 ஏப்ரல் 2014 (14:06 IST)
ராஜீவ் கொலை வழக்கில் 7 பேர் விடுதலை குறித்து மேல் விசாரணை நடத்த அரசியல் சாசன அமர்வுக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் அளித்த பேட்டி விவரம் வருமாறு:-
முக்கியமான வழக்குகளை அரசியல் சாசன அமர்வு விசாரிக்க அனுப்புவது வழக்கமான ஒன்றுதான். இதில் மத்திய அரசுக்கு அதிகாரமா? அல்லது மாநில அரசுக்கு அதிகாரமா? என்று சிலர் பேசிவருகின்றனர். இது சாதாரண கொலையாக இருந்திருந்தால் மாநில அரசு நேரடியாக விடுதலை செய்ய அதிகாரம் உண்டு.
 
தேசத்தினுடைய மாபெரும் தலைவர் இதில் கொல்லப்பட்டிருக்கின்றார். மேலும் கொலை செய்தவர்களில் நான்கு பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். இந்தியர்கள் அல்ல. அவர்களுக்கு பாஸ்போர்ட் கிடையாது. விசா கிடையாது. திட்டமிட்டு ஊடுருவி மாபெரும் தேசத் தலைவரை கொலை செய்துள்ளனர்.
 
இன்று காலை அற்புதம்மாள் செய்தியாளர்களிடம் பேசியதை பார்த்தேன். அவர், இந்த 7 பேரும் நிரபராதிகள் என்று சொல்கிறார். அது தவறான ஒன்றாகும். அவரை யாரோ தவறாக வழிநடத்துகிறார்கள். அருகில் ஒருவர் நிரபராதி என்று சொல்லிக் கொடுக்கிறார். குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளனர். கருணை மனு கால தாமதத்தால் தண்டனை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. விடுதலை குறித்த மாநில அரசின் அறிவிப்பு சரியா? தவறா? என்பதற்காக தான் அரசியல் சாசன அமர்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
 
இந்த பிரச்சனையை சட்ட ரீதியாக பார்க்க வேண்டுமே தவிர, அரசியல் செய்யக் கூடாது. சிலர் தமிழ் உணர்வாளர்கள் என்ற பெயரில் இதை வைத்து அரசியல் செய்கிறார்கள். 3 மாதத்திற்குள் இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு வந்துவிடும். அதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு ஞானதேசிகன் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்