ஏப்ரல் 1 முதல் ஸ்மார்ட் ரேசன் கார்டு. உணவுத்துறை அமைச்சர் உறுதி

வெள்ளி, 3 மார்ச் 2017 (05:52 IST)
தமிழகத்தில் புதிய ரேசன் கார்டுகள் கடந்த 2009ஆம் ஆண்டில் இருந்து வழங்கப்படவில்லை ஒவ்வொரு ஆண்டும் உள்தாள் ஒட்டப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஸ்மார்ட் ரேசன் கார்டு தயாராகி வருவதால் இந்த தாமதம் என்று கூறப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு கண்டிப்பாக ஸ்மார்ட் ரேசன் கார்டு வழங்கப்பட்டுவிடும் என்று ஏற்கனவே உறுதி கூறப்பட்டது.




அந்த வகையில் தற்போது உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நேற்று செய்தியாளர்களிடம் பேசியபோது ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.

தற்போது ரேசன் கார்டு உடன் ஆதார் கார்டு எண்களை சரிபார்க்கும் பணிகள் இறுதிக் கட்டமாக நடைபெற்று வருவதாகவும் இந்த பணிகள் முடிவடையும் தருவாயில் இருப்பதால் கண்டிப்பாக வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல், தமிழ்நாடு முழுவதும் ஸ்மார்ட் ரேசன் கார்டுகள் வழங்கும் பணிகள் தொடங்கும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்

மேலும் தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் 2.95 லட்சம் மெட்ரிக் டன் அரிசி, 31,868 மெட்ரிக் டன் சர்க்கரை, 13,602 மெட்ரிக் டன் கோதுமை, 23,638 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் ஆகியவை 32,685 ரேசன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்