உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளன. இந்நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் மற்றும் ஆஸ்ட்ரா ஜெனிகா இணைந்து கோவிஷீல்டு என்ற தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளன. இந்த தடுப்பூசி கொரோனாவிலிருந்து மக்களை எந்தளவு பக்க விளைவு இல்லாமல் காக்கும் என்பது தொடர்பாக ஆராய இதை முதலாவதாக தன்னார்வலர்களுக்கு அளித்து சோதனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் கோவிஷீல்டு பரிசோதனை தன்னார்வலர்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தன்னார்வலர் ஒருவருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்பட்டதாக வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து புகாரளித்துள்ள தன்னார்வலர் உடனடியாக மற்றவர்களுக்கும் பரிசோதனையை நிறுத்த வேண்டும் என்றும், 15 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
ஆனால் இதுகுறித்து கூறியுள்ள சீரம் இன்ஸ்டிடியூட் “தன்னார்வலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது குறித்து வருந்துகிறோம். ஆனால் இது தடுப்பூசி சோதனையால் ஏற்பட்டதல்ல என மருத்துவர் சோதனை செய்து தன்னார்வலருக்கு விளக்கியுள்ளனர். எனினும் அவர் இதை பொது வெளிக்கு கொண்டு சென்றிருப்பது உள்நோக்கம் கொண்டதாக தெரிகிறது. இது தொடர்பாக அவர் மீது வழக்கு தொடரவும், ரூ.500 கோடி நஷ்டஈடு கோரவும் உள்ளோம்” என தெரிவித்துள்ளது.