போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் அவர் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் சென்னை அமர்வு நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் ஆகியவற்றில் ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. ஆனால் அதே நேரத்தில், 25 லட்சம் ரூபாய்க்கான இரண்டு நபர் உத்தரவாதம் உள்பட சில நிபந்தனைகளை உச்சநீதிமன்றம் விதித்துள்ள நிலையில், இந்த நிபந்தனைகளை நிறைவேற்றும் பணிகள் சில மணி நேரங்களாக நடந்து வந்தன.
இந்த நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பில் குழப்பம் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அனைத்து குழப்பமும் நீங்கி விட்டதாகவும், உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் 25 லட்சம் ரூபாய் இரண்டு நபர் ஜாமீன் உத்தரவாதம் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் செந்தில் பாலாஜியை விடுதலை செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.