மருத்துவப்படிப்புக்கான நீட் நுழைவுத்தெர்வு மூலம் அரசுப்பள்ளி மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக்கனவு கலைந்துவருகிறது. இதில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக மக்கள் போராடி வருகின்றனர். இருப்பினும் மத்திய அரசு நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கவில்லை. ஆனால் மாணவர்களுக்காக நீட் தேர்வில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதற்கு ஏதுவாக அரசு நீட் தேர்வு பயிற்சி மையங்கள் உருவாக்கப்பட்டன.
ஆனால் இந்த மையங்களில் படித்து தேர்வெழுதிய ஒருவர் கூட மருத்துவப் படிப்புக்கு தேர்வாகவில்லை. 19,355 மாணவர்களில் 2 ஆயிரம் பேருக்கு மேல் தேர்ச்சி பெற்றிருந்தனர். ஆனால் கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் அவர்களில் ஒருவருக்குக் கூட இடம் கிடைக்கவில்லை . இதுகுறித்து இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் கேள்வி எழுப்பியபோது, அவர்’ ஒருவருக்குக் கூட இடம் கிடைக்கவில்லை என்பது பொய். இரண்டு மாணவர்களுக்கு இந்த ஆண்டு மருத்துவப் படிப்புக்கான இடம் கிடைத்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் இன்னும் இது அதிகமாகும் என எதிர்பார்க்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.