ராணுவ ஸ்டிக்கர் ஒட்டி போலி மது பாட்டில்கள் விற்பனை.! முன்னாள் ராணுவ வீரர் கைது.!!

Senthil Velan

வெள்ளி, 13 செப்டம்பர் 2024 (15:36 IST)
பெங்களூரில் இருந்து கூரியர் மூலம் குமரி மாவட்டத்திற்கு  ராணுவ ஸ்டிக்கர் ஒட்டிய போலி மதுபாட்டில்கள் வரவழைத்து விற்பனை செய்த முன்னாள்  ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.
 
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் செயல்பட்டு வந்த ஒரு கெமிக்கல் கம்பெனியை சோதனை செய்த குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் அது போலி கெமிக்கல் கம்பெனி என்பதை கண்டுபிடித்தனர். மேலும் அங்கிருந்து சட்ட விரோதமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு பேரல்களில் தனியார் பார்சல் சர்வீஸ்கள் மூலம் போலி கம்பெனி பெயர்களில் பதிவு செய்து அதில், ராணுவ ஸ்டிக்கர் ஒட்டிய போலி மதுபாட்டில்கள் அனுப்பி வைக்கப்பட்டதையும் விசாரணையில் தெரியவந்தது.
 
இதை அடுத்து அந்த கம்பெனியை சீல் வைத்து உளவு பிரிவு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.  தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் போலீசார் கைது நடவடிக்கைளில் ஈடுபட்டு வந்தனர். இதன் தொடர்ச்சியாக குமரிமாவட்டம் தக்கலை மற்றும் இரணியல் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி லெட்சுமி தலைமையில் போலீசார், குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 


முன்னாள் ராணுவ வீரர் கைது:
 
விசாரணையில்  பெங்களூருவில் இருந்து கடந்த 6ம் தேதி 6 பேரல்களில் மார்த்தாண்டம் தனியார் கூரியர் அலுவலகத்துக்கு கெமிக்கல் பேரல் வந்ததாகவும், அந்த பேரல்களை திருத்துவபுரம் பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் செல்வராஜ்  காரில் எடுத்துச் சென்றதாகவும் விசாரணையில் தெரியவந்தது. இதை அடுத்து  செல்வராஜ் வீட்டை மதுவிலக்கு போலீசார் அதிரடியாக சோதனையிட்டனர்.

அப்போது கூரியரில் கெமிக்கல்கள் வந்ததாக கூறப்பட்ட ஆறு பேரல்களையும், வீட்டில் மறைத்து வைத்திருந்த ராணுவ ஸ்டிக்கர் ஒட்டிய 11 போலி மது பாட்டில்களையும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து செல்வராஜிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், பேரல்களில் போலியாக ராணுவ ஸ்டிக்கர் ஒட்டிய மது பாட்டில்களை கொண்டு வந்து குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்தது தெரியவந்தது.


ALSO READ: முதலமைச்சர் அலுவலகத்திற்கு செல்லக்கூடாது.! கோப்புகளில் கையெழுத்து போடக்கூடாது - கெஜ்ரிவாலுக்கு நிபந்தனை..!!
 
இதன் பின்னர் செல்வராஜ் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தில்  தொடர்புடைய அஜித் மற்றும் நெல்லையை சேர்ந்த ராஜன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில் தலைமறைவாக உள்ள இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்