இது குறித்து அவர் விரிவாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு, ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தமிழகத்தில் பேரணி நடத்துவதற்கு அனுமதி வழங்கியிருக்கும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. காந்தி ஜெயந்தியன்று, அவரது படுகொலைக்காகத் தடைசெய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ். எனும் மதவாத இயக்கத்தின் பேரணிக்கு மாநிலத்தின் 50 இடங்களில் அனுமதி அளித்திருப்பது எந்தவகையிலும் ஏற்புடையதல்ல.
மதப்பூசல்களை அனுமதியாது எப்போது அமைதிப்பூங்காவாகத் திகழும் தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பேரணிக்கு அனுமதி வழங்கும் முடிவானது மிகத்தவறான முன்னுதாரணமாகும். மக்கள் நலனென்பது துளியுமற்று, மதவாத அரசியலையும், பிரித்தாளும் சூழ்ச்சியையும் கையிலெடுத்து, நாட்டைத் துண்டாடி அதன்மூலம் அரசியல் இலாபமீட்டத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் பேரணியை தமிழக மண்ணில் அனுமதிப்பதென்பது மத நல்லிணக்கத்துக்கும், சமூக அமைதிக்கும் ஊறு விளைவிக்கும் பேராபத்தாகும்.
ஆகவே, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பேரணிக்கு அனுமதி வழங்கியிருக்கும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டுமென தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.