சென்னையில் 1 லட்சம் லஞ்சம் வாங்கிய பள்ளி முதல்வர் கைது

செவ்வாய், 10 ஏப்ரல் 2018 (08:18 IST)
சென்னையில் தாழ்த்தப்பட்ட மாணவனை பள்ளியில் சேர்க்க ரூ. 1 லட்சம் லஞ்சம் வாங்கிய கேந்திர வித்யாலயா பள்ளி முதல்வரை சிபிஐ கைது செய்துள்ளது.
கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாணவன், சென்னை அசோக் நகரில் செயல்பட்டு வரும் கேந்திர வித்யாலயா பள்ளியில் 1ம் வகுப்பு சேர பள்ளியின் முதல்வராக ஆனந்தன் என்பவரை மாணவனின் பெற்றோர் அணுகியுள்ளார்.
 
பள்ளியில் மாணவனை சேர்க்க வேண்டுமென்றால், ஆனந்தன் மாணவனின்  பெற்றோரிடம்  ரூ. 1 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். மாணவனின் பெற்றோரும் அவருக்கு லஞ்சம் தர ஒப்புக் கொண்டதோடு சிபிஐயிடமும் புகார் அளித்தனர். பெற்றோர் இன்று காலையில் முதல்வர் ஆனந்தனை சந்தித்து பணத்தை தர முடிவு செய்துள்ளனர். பள்ளி வளாகத்திற்குள்ளேயே உள்ள முதல்வரின் வீட்டில் வைத்து ரூ. 1 லட்சம் லஞ்சப்பணத்தை கொடுக்கும் போது சிபிஐ ஆனந்தனை கையும் களவுமாக பிடித்தது.
 
இதனையடுத்து ஆனந்தனின் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகின்றனர். பள்ளி முதல்வர் லஞ்சம் வாங்கி கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்