சென்னையில் திடீர் மணல் ஊற்று: அரசு பள்ளியில் பரபரப்பு

வியாழன், 7 ஜூலை 2016 (15:23 IST)
சென்னை எழும்பூரில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பெண்கள் கழிவறையில் நேற்று காலையில் திடீரென மணல்மேடு காணப்பட்டது. பூமிக்கடியில் இருந்து சகதி கலந்த மணல் பொங்கி வெளியேறியதால் பள்ளிப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


 
 
சென்னையில் மெட்ரோ ரெயில் சுரங்கப் பணிகள் சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்று வருகின்றன. மெட்ரோ பணிகளுக்காக ‘டனல்’ என்ற ராட்சத சுரங்கம் தோண்டும் எந்திரம் தரைமட்டத்தில் இருந்து 30 மீட்டருக்கு அடியில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் பள்ளிக்கு வந்த மாணவிகள் கழிவறைக்கு சென்றபோது அங்கு 4 அடி உயரத்துக்கு மணல் நிரம்பி இருந்தது. இது குறித்து தலைமை ஆசிரியர் கண்மணி மெட்ரோ ரெயில் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
 
இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த மெட்ரோ ரெயில் அதிகாரிகள் ஆய்விற்கு பின்னர் பள்ளிக்கு அடியில் சுரங்கம் தோண்டும் பணியின்போது மணல் வெளியேறி இருக்கலாம் என தெரிவித்தனர். இதனை அடுத்து பள்ளி மைதானத்தில் குவியளாக கொட்டி வைக்கப் பட்டுள்ள சுமார் 2 டன் அளவுள்ள மணலை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்