மின்வாரிய துறையினரின் அலட்சியப்போக்கு: தேசிய ஜூடோ வீரர் குறித்து சசிகலா..!

வெள்ளி, 28 ஜூலை 2023 (13:15 IST)
தமிழக மின்வாரிய துறையினரின் அலட்சியப்போக்கால் தேசிய ஜூடோ வீரர் வாழ்க்கையே கேள்விக்குறியாக்கி இருக்கும் என சசிகலா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
மதுரை கோச்சடை பகுதியில் பழுதடைந்த மின்கம்பத்தை மின்வாரிய ஊழியர்கள் கிரேன் உதவியுடன் சீரமைத்துக் கொண்டிருந்த போது திடீரென கிரேனில் இருந்து கீழே கழன்று விழுந்த மின்கம்பம், அந்த வழியாக நடந்து சென்ற தேசிய ஜூடோ வீரர் பரிதி விக்னேஸ்வரனின் இடது காலில் விழுந்து கணுக்கால் முறிந்துள்ளது மிகவும் வேதனை அளிக்கிறது. இந்த வீரரின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கி இருக்கும் தமிழக மின்வாரிய துறையினரின் அலட்சியப்போக்கிற்கு கடும் கண்டனம்.
 
மதுரை கோச்சடை பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் தீர்த்தம் என்பவரின் மகனான ஜூடோ வீரர் பரிதி விக்னேஸ்வரன் எளிய குடும்பத்தை சேர்ந்தவர். ஜூடோ விளையாட்டு போட்டியில் சிறப்பாக விளையாடி பல்வேறு பதக்கங்களை வென்றுள்ள பரிதி விக்னேஸ்வரன் அடுத்த மாதம் தேசிய அளவில் நடைபெறும் ஜூடோ போட்டியில் கலந்து கொள்வதற்காக பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் தமிழக மின் வாரியத்தின் அலட்சியத்தால் இன்றைக்கு அவருடைய கணுக்காலை இழந்து அவரது எதிர்காலமே கேள்விக்குறியாகி இருக்கிறது.
 
திமுக தலைமையிலான அரசின் அலட்சியப்போக்கால் ஏற்கனவே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மதுரை மாநகராட்சியில் பாதாள சாக்கடை விரிவாக்க பணியின் போது சக்திவேல் என்ற தொழிலாளி 16 அடி ஆழத்தில் உள்ள குழிக்குள் இறங்கி வேலை பார்த்தபோது திடீரென மண் சரிந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். அதேபோன்று சென்னையிலும் ஜாபர்கான்பேட்டை பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளுக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் தவறி விழுந்து இளம் பத்திரிகையாளர் முத்துகிருஷ்ணன் உயிரிழந்தார். திமுக தலைமையிலான அரசு எந்த பணிகளையும் சரிவர செய்வதில்லை என்பதை நாள்தோறும் நிரூபித்துக்கொண்டே இருக்கிறது. மதுரை மாநகராட்சியும் தனது பொறுப்பை தட்டிக்கழித்து, மக்களின் பாதுகாப்பில் எந்தவித அக்கறையும் காட்டாமல் வேடிக்கை மட்டும் பார்க்கிறது என்பது இன்றைக்கு வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.  மின்கம்பம் பொருத்தும் பணியின் பொழுது எந்தவிதமான பாதுகாப்பு மற்றும் முன்னறிவிப்பு இன்றி அலட்சியமாக பணிகளை மேற்கொண்டதால், இன்றைக்கு ஒரு வீரரின் இலட்சியமும், தான் ஒரு போலீஸ் அதிகாரியாக வர வேண்டும் என்கிற கனவும் நிர்மூலமாகி விட்டது. மக்களைப்பற்றி சிறிதும் கவலைப்படாத திமுக தலைமையிலான இந்த விளம்பர ஆட்சியில், இன்னும் எத்தனை அப்பாவி உயிர்களை இழந்து தவிக்க போகிறோம் என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.
 
மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பரிதி விக்னேஸ்வரன் விரைவில் பூரணமாக குணமடைய ஆண்டவனை வேண்டுகிறேன். தமிழகத்தின் இளம் ஜூடோ வீரர் பரிதி விக்னேஸ்வரனின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி இருக்கும் திமுக தலைமையிலான அரசு, அவருக்கு உரிய இழப்பீடு வழங்கியும், அரசு வேலை வாய்ப்பை ஏற்படுத்தியும் தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்