அம்மா நினைவகம் ஆகும் போயஸ் கார்டன் : வெளியேறும் சசிகலா?

செவ்வாய், 13 டிசம்பர் 2016 (13:26 IST)
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து அவரின் தோழி சசிகலா வெளியேற முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது.


 

 
தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் அவர் வகித்து வந்த பொதுச்செயலாளர் பதவியில் அவரின் நெருங்கிய தோழி சசிகலாவை அமர வைக்க பெரும்பாலான அதிமுகவின் குரல் கொடுத்து வருகின்றனர். முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முதல் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மூத்த அமைச்சர்களும் சசிகலாவிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால், அதிமுக தொண்டர்கள் ஏராளமானோர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  
 
இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டின் பல இடங்களில் சசிகலாவை முன்னிறுத்தி போஸ்டர்கள்  ஒட்டப்பட்டுள்ளன. எனவே விரைவில் நடக்கவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அவர் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஆனால், சசிகலாதான் அதிமுகவின் அடுத்த தலைமை என அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் நினைத்தாலும், அதிமுக அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதன் எதிரொலியாக சமீபத்தில் சென்னை மற்றும் தமிழ்நாட்டின் சில இடங்களில், சசிகலாவை முன்னிறுத்தி ஒட்டப்பட்டிருந்த பேனர் மற்றும் போஸ்டர்கள் கிழித்து எறியப்பட்டன.
 
மேலும், அதிமுகவின் சட்டவிதிப்படி சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்க முடியாது என்ற செய்தியும் உலா வந்த வண்ணம் உள்ளது.


 

 
எனவே இதுகுறித்து யோசனை செய்த சசிகலா தரப்பு, இப்படி ஒரு சூழ்நிலையில், தான் அதிமுகவின் தலைமை ஏற்பது சரியாக இருக்காது எனக் கருதுவதாகவும், அதை தவிர்க்க சில வியூகங்கள் அமைத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
 
தற்போது சசிகலா போயஸ் கார்டனுக்கு வரும் பொதுமக்கள், நிர்வாகிகள் ஆகியோருக்கு ஆறுதல் கூறிவருகிறார். மேலும், தன்னுடைய உறவினர்களையும் போயஸ் கார்டனிலிருந்து வெளியேறுமாறு கூறிவிட்டார். மேலும், ஜெ. வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை ‘அம்மா நினைவகம்’ என்ற பெயரில் நினைவிடமாக மாற்றுவதோடு, போயஸ் கார்டனிலிருந்து வெளியேறி விடலாம் என அவர் முடிவெடுத்திருப்பதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
 
இதன் மூலம் செண்டிமெண்டாக அவர் மீது மக்களுக்கு ஒரு ஈர்ப்பும், இரக்கமும், நம்பிக்கையும் பிறக்கும் என அவர் நம்புவதாக தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்