அதிமுக தலைமை அலுவலகத்தில் அடிதடி - சசிகலாவின் புஷ்பா வழக்கறிஞர் மீது தாக்குதல்
புதன், 28 டிசம்பர் 2016 (14:18 IST)
சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்திற்கு வந்த சசிகலா புஷ்பாவின் கணவர் மற்றும் அவரின் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. ஜெயலலலிதா மறைந்து விட்ட நிலையில், அவர் வகித்து வந்த அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான நபர் நாளை தேர்தெடுக்கப்படவுள்ளார். அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள், ஜெ.வின் தோழியான சசிகலாவே அதன் பொறுப்பை ஏற்றுக் கொண்டு கட்சியை வழி நடத்திச் செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும், சசிகலாவே நாளை பொதுச் செயலராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் மரணமடைந்த வரை, சசிகலா மீது புகார் கூறி வந்தார் அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா. மேலும், அதிமுக பொதுச்செயலராக சசிகலா நியமிக்கப்படக்கூடாது எனவும், அதற்கான தேர்தலில் சசிகலாவை எதிர்த்து நான் போட்டியிடுவேன் எனவும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், சசிகலா புஷ்பாவின் கணவர் மற்றும் அவரின் வழக்கறிஞர் ஆகியோர் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்தனர். சசிகலா புஷ்பாவின் வேட்பு மனுவை அவர்கள் கொண்டு வந்திருக்கலாம் எனத் தெரிகிறது.
ஆனால், அதிமுக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா, எப்படி தேர்தலில் போட்டியிட முடியும் மற்றும் கட்சி விவகாரங்களில் தலையிட முடியும் என கோபம் கொண்ட அதிமுகவினர், அவர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி, சசிகலாவின் புஷ்பாவின் வழக்கறிஞரை சராமாரியாக தாக்கத் தொடங்கினர்.
அவரை போலீசார் மீட்டு அங்கிருந்து இழுத்து செல்ல முயன்றனர். ஆனாலும் அதிமுகவினர் தொடர்ந்து அவரை தாக்கினர். இதனால் அவரின் தலை, முகம் ஆகிய இடத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. அதன்பின் ஒருவழியாக போலீசார் அவர்களை மீட்டு அங்கிருந்து வெளியேற்றினர்.
சசிகலா புஷ்பா மற்றும் அவரின் ஆட்கள் எவரையும் உள்ளே அனுமதிக்க மாட்டோம் எனவும், சசிகலாதான் அடுத்த தலைமை எனவும் அதிமுகவினர் ஆக்ரோஷமாக கூறினர்.