கடந்த சனிக்கிழமை டெல்லி விமான நிலையத்தில் திமுக எம்.பி.திருச்சி சிவாவுக்கும், அதிமுக எம்.பி.சசிகலா புஷ்பாவுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் திருச்சி சிவாவை சசிகலா புஷ்பா கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து சசிகலா புஷ்பாவிடம் ஜெயலலிதா விளக்கம் கேட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது மாநிலங்களவையில் சசிகலா புஷ்பா இந்த விவகாரம் தொடர்பாக தனக்கு பாதுகாப்பு இல்லை என பேசிக்கொண்டிருக்கும் போதே, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அவரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார்.
கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சசிகலா புஷ்பா நடந்து கொண்டதால் அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக ஜெயலலிதா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 2014-ஆம் ஆண்டு மாநிலங்களைவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா புஷ்பாவின் பதவிக்காலம் 2020 வரை உள்ளது குறிப்பிடத்தக்கது.