சசிகலா புஷ்பா குடும்பத்துடன் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு
செவ்வாய், 23 ஆகஸ்ட் 2016 (18:28 IST)
சசிகலா புஷ்பா குடும்பத்துடன் வருகிற 29ஆம் தேதி நேரில் ஆஜராக மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா உறுப்பினர் சசிகலா புஷ்பா மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றது.
சசிகலா புஷ்பா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது, வீட்டில் பணிபுரிந்த இளம்பெண் பானுமதி, அவருடைய சகோதரி ஜான்சிராணி ஆகியோர் பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் செய்தனர்.
அதன்பேரில் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதனால் காவல்துறையினர் அவர்களை கைது செய்யாமல் இருக்க மதுரை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் வழங்க மனு தாக்கல் செய்தனர்.
இதையடுத்து சசிகலா புஷ்பா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து பானுமதி மனு தாக்கல் செய்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி வி.எம்.வேலுமணி, சசிகலா புஷ்பா மற்றும் அவரது குடும்பத்தினரை வருகிற 29ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளார்.