ஜெ. சமாதியில் சசிகலா உண்ணாவிரதம்: முதல்வர் பதவியை அடைய திட்டம்!

சனி, 11 பிப்ரவரி 2017 (16:19 IST)
தமிழக முதல்வராக சசிகலா கடும் முயற்சியில் இறங்கியுள்ளார். ஆட்சியமைக்க உரிமை கோரி ஆதரவு எம்எல்ஏக்களின் கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்தார் சசிகலா. ஆனால் ஆளுநர் இதுவரை எந்த பதிலையும் சொல்லவில்லை.


 
 
இதனால் பன்னீர்செல்வம் அணிக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. இன்று அதிரடி திருப்பமாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பன்னீர்செல்வம் அணிக்கு மாறினார். நேற்று வரை சசிகலாவுக்கு ஆதரவாக பேசி வந்தார் மாஃபா பாண்டியராஜன்.
 
இவரின் இந்த திடீர் முடிவு சசிகலா தரப்பை மிகவும் அதிர்ச்சியடைய வைத்தது. இதனையடுத்து உடனடியாக எம்எல்ஏக்கள் சிறை வைக்கப்பட்டுள்ள கூவத்தூருக்கு புறப்பட்டு சென்றுள்ளார் சசிகலா.
 
இந்நிலையில் கூவத்தூர் சென்றுள்ள சசிகலா இன்று சென்னை திரும்பியதும் மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதியில் உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. அதே நேரம் ஆளுநரையும் சந்திக்க சசிகலா நேரம் கேட்டிருக்கிறார். ஆளுநர் பதவியேற்க அழைக்கும் வரை தனது உண்ணாவிரதத்தை சசிகலா தொடர இருப்பதாக கூறப்படுகிறது.
 
இது குறித்து தகவலறிந்த ஆளுநர் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க மாநகர காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். கலவரம் உருவாகும் சூழல் இருப்பதாகவும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் சென்னையில் உள்ள அனைத்து விடுதிகளிலும் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்