ஓசூர் எம்.எல்.ஏ வீட்டிற்கு சென்றார் சசிகலா - டிஐஜி ரூபா அதிர்ச்சி தகவல்
புதன், 23 ஆகஸ்ட் 2017 (11:59 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, சமீபத்தில் ஒசூர் எம்.எல்.ஏ வீட்டிற்கு சென்றுள்ளார் என டிஐஜி ரூபா அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
சிறையில் சசிகலா மற்றும் இளவரசிக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் பற்றி பல தகவல்களை டிஐஜி ரூபா பகிருந்து வருகிறார். ஏற்கனவே, சிறையில் ஆய்வு நடத்திய அவர் சசிகலாவிற்கு 5 அறைகள் ஒதுக்கப்பட்டிருந்ததும், அவருக்கு அங்க சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டிருப்பதையும் ஆதாரத்துடன் வெளியிட்டார். இதனையடுத்து அவர் போக்குவரத்துதுறை அதிகாரியாக மாற்றப்பட்டார்.
அந்நிலையில், சிறையில் இருக்கும் சசிகலா சாதாரண உடையில், அவரின் உறவினர் இளவரசியோடு வெளியே சென்று விட்டு சிறைக்கு திரும்பும் வீடியோ சமீபத்தில் வெளியாகி பலரையும் அதிர்ச்சி அடைய செய்தது.
அதேபோல், சசிகலாவை பெங்களூர் ஆர்.என்.ஜி சாலையில் பார்த்ததாக, காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதியிருந்ததையும் அவர் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறி அதிர்ச்சி கிளப்பினார்.
இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறைக்கு, கடந்த 19ம் தேதி ரூபா அளித்துள்ள அறிக்கையில், சசிகலா சிறையிலிருந்து வெளியே சென்று ஒசூர் எம்.எல்.ஏ-வின் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். அதற்கான வலுவான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. மேலும், சிறையில் ஒன்று மற்றும் 2வது வாசல்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் அவர் சிறையிலிருந்து வெளியே செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனிப்பட்ட முறையில் சசிகலா சிறை விதிமுறைகளை மீறியுள்ளார் எனவும், அவருக்கு சிறை அதிகாரிகள் உடந்தையாக இருந்துள்ளனர் எனவும், சிறையில் அவரை முதல் வகுப்பு சிறைக்கைதி போல் நடத்திய அதிகாரிகள் மீதும், நீதிமன்ற அவமதிப்பு செய்த சசிகலா மற்றும் இளவரசி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.