சங்கர நேத்ராலயா நிறுவனர் எஸ்.எஸ்.பத்ரிநாத் மறைவு- அண்ணாமலை, தினகரன் இரங்கல்

செவ்வாய், 21 நவம்பர் 2023 (14:36 IST)
இந்தியாவின் மிகப்பெரிய தொண்டு மருத்துவமனைகளில் ஒன்று சங்கர நேத்ராலயா மருத்துவமனை. இந்த மருத்துவமனை நிறுவனர்  மற்றும் தலைவரான  டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத்  உடல் நலக்குறைவால் பத்ரிநாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலமானார். அவருக்கு வயது 83.

அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் கூறி வருகின்றனர்.

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,

‘’இந்தியாவின் மிகப்பெரிய தொண்டு மருத்துவமனைகளில் ஒன்றான சங்கர நேத்ராலயா மருத்துவமனையின் நிறுவனர்,  டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன்.

கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக, பொருளாதார ரீதியாக நலிவடைந்த ஏழை எளிய மக்களுக்கும் தரமான கண் மருத்துவ சிகிச்சை, இலவசமாக வழங்கப்படுவதை உறுதி செய்தவர். கண் மருத்துவக் கல்விப் பணிகளிலும் சிறந்து விளங்கியவர். உயரிய பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளைப் பெற்றவர்.

டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் அவர்கள் மறைவு, நம் சமூகத்துக்கும், மருத்துவ உலகுக்கும் பேரிழப்பாகும். அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்,
 தமிழக பாஜக சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஓம் சாந்தி!’’  என்று தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் கூறியுள்ளதாவது:

‘’நாட்டின் மிகப்பெரிய தொண்டு நிறுவன மருத்துவமனைகளில் ஒன்றான சங்கர நேத்ராலயா மருத்துவமனையின் நிறுவனர் பத்மபூஷன் திரு.பத்ரிநாத் அவர்களின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது.

லாப நோக்கமற்ற நிர்வாகம், ஏழை, எளிய மக்களுக்கு இலவச சிகிச்சை, இளம் மருத்துவர்களுக்கு பயிற்சி என நாட்டின் கண் மருத்துவ சிகிச்சையை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் சென்ற திரு.பத்ரிநாத் அவர்களின் மறைவு மருத்துவத்துறைக்கு பேரிழப்பாகும்

லட்சக்கணக்கான மக்களுக்கு பார்வையளித்த திரு.பத்ரிநாத் அவர்களை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், சக மருத்துவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.’’என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்