சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது தொடர்பான வழக்கில் சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கு அரசின் சலுகைகளும் காரணம் என நீதிபதி அனிதா சுமந்த கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் கடந்த செப்டம்பரில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியது தேசிய அளவில் சர்ச்சைக்குள்ளானது. இதுகுறித்து வெவ்வேறு மாநில நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு மற்றும் திமுக எம்.பி ஆ.ராசா ஆகியோர் எந்த அடிப்படையில் பதவியில் நீடிக்கிறார்கள் என கேள்வி எழுப்பி கோ-வரண்டோ வழக்குகள் இந்து முன்னணி அமைப்பினரால் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்திருந்த நிலையில் எந்த அடிப்படையில் பதவியில் நீடிக்கிறார்கள் என விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட முடியாது என்றும், மனுதாரர்கள் கோரிய எந்த நிவாரணமும் வழங்க முடியாது என்றும் நீதிபதி அனிதா சுமந்த் உத்தரவிட்டார்.
ஆனால் வழக்கின்போது பேசிய அவர், சனாதனத்தை நோய்களுடன் ஒப்பிட்டு பேசியது உதயநிதி ஸ்டாலினுக்கு இந்துத்துவம் குறித்த புரிதல் இல்லாததையே காட்டுவதாக பேசியிருந்தார்.
சாதிய பாகுபாடு குறித்து பேசியுள்ள அவர் “சாதிய அடிப்படையிலான வன்முறை, காட்டுமிராண்டித்தனத்திற்கு பல்வேறு சாதிய அமைப்புகளுக்கும் அரசு வழங்கும் சலுகைகளும் ஒரு காரணம். இதற்கு வர்ணாசிரம தர்மத்தை மட்டுமே காரணம் காட்டக் கூடாது. மக்கள் செய்யும் தொழிலை அடிப்படையாக கொண்டே சாதிகள் உருவானதே தவிர பிறப்பால் அல்ல. இன்று தலைவிரித்தாடும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் ஒழிக்கப்பட வேண்டும்” என பேசியுள்ளார்.
சாதிய அடிப்படையில் அரசு வழங்கும் சலுகைகளை மறைமுகமாக குறிப்பிட்டு அரசை விமர்சிக்கும் வகையில் நீதிபதி பேசியுள்ளது சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.