எஸ்.ஐ கொலை வழக்கு: கள்ளக் காதலியிடம் கொலை செய்ததை நடித்துக்காட்ட சொல்லி தீவிர விசாரணை

திங்கள், 28 ஜூலை 2014 (07:39 IST)
படுகொலை செய்யப்பட்ட எஸ்.ஐ கணேசனின் கள்ளக் காதலி வனிதாவுக்கு உதவி செய்தது யார் என்று அறிய அவரைக் காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.

சிதம்பரம் அண்ணாமலை நகரில் காவல் நிலையத்தில் துனை ஆய்வாளராக இருந்தவர் 32 வயதுடைய கணேசன். இவர் கடந்த 22 ஆம் தேதி இரவு அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்டார்.

காவல் துறையினரின் விசாரணையில் எஸ்.ஐ யை அவரது கள்ளக்காதலி வனிதா கொலை செய்தது தெரியவந்தது. கொலை நடந்த அன்று இரவே சேலம் பேருந்தில் ஏறி  தப்பிச்செல்ல முயன்ற வனிதாவை விருத்தாசலத்தில் காவல் துறையினர் மடக்கிப் பிடித்தனர்.

பின்னர் அவரை தனி இடத்தில் வைத்து ரகசியமாக விசாரணை நடத்தினார்கள். அதில் தன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி ஏமாற்றியதால்தான் கொலை செய்தேன் என்றும் எஸ்.ஐ கணேசனும் தானும் கணவன் மனைவி போல் பல்வேறு ஊர்களுக்குச் சென்று வந்த தகவல்களையும் வனிதா வாக்குமூலத்தில் கூறியிருந்தார்.

அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க சிதம்பரம் மாஜிஸ்திரேட் சுரேஷ்குமார் உத்தரவிட்டார். இதன் பிறகு காவல் துறையினர் வனிதாவைக் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் காவல் துறையினர் வனிதாவை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அவரை சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்று எப்படி கொலை செய்தார் என்பதை நடித்துக்காட்டச்சொல்லி அதை வீடியோவில் பதிவு செய்யவும் முடிவு  செய்துள்ளனர்.

ஒரு காவல் துறையினர் அதிகாரியை தன்னந்தனியாக வனிதா கொலை செய்திருக்க முடியாது. அவருக்கு யாராவது உதவியிருக்க வேண்டும் என்று காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இந்த கொலையில் வனிதாவுக்கு யாராவது உதவினார்களா என்பது குறித்து அப்போது காவல் துறையினர் தீவிரமாக விசாரிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்