குடிநீர் தொட்டியில் செத்துக் கிடந்த நாயால் வாந்தி, மயக்கம்: சட்டக் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்

சனி, 1 ஆகஸ்ட் 2015 (14:19 IST)
குடிநீர் தொட்டியில் நாய் ஒன்று செத்துக் கிடந்ததால் விடுதி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதையடுத்து சட்டக் கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 
சட்டக் கல்லூரி மாணவர்களுக்கான விடுதி சென்னை புரசைவாக்கம் மில்லர்ஸ் சாலையில் செயல்பட்டு வருகிறது.
 
சில தினங்களுக்கு முன்னர் இந்த விடுதியில் மதிய உணவு சாப்பிட்ட 100 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
 
இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டனர்.
 
இந்நிலையில், விடுதி வளாகத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் நாய் ஒன்று செத்து கிடந்ததே வாந்தி, மயக்கத்திற்கு காரணம் என்பது தெரியவந்தது.
 
இதனால், நாய் செத்துக்கிடந்த தண்ணீரில் சமையல் செய்யக்கூடாது என்றும் சுகாதாரமான குடிநீரை வழங்கவேண்டும் என்றும் விடுதியை மேம்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி விடுதி மாணவர்கள் மில்லர்ஸ் சாலை சந்திப்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
 
இதைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களோடு சட்டக்கல்லூரி முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
 
அப்போது, மாணவர்கள் தரப்பில் கூறப்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார். இதையடுத்து, மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
 
பின்னர், நாய் செத்துக்கிடந்த குடிநீர் தொட்டியை தூய்மைபடுத்துவதற்காக, பொதுப்பணித்துறை, மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, நாய் செத்துக்கிடந்த குடிநீர் தொட்டியில் இருந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்