ஆர்.கே.நகர் தேர்தல்: ஊதியம் வாங்கும் காவல்துறை அதிகாரி ஜெயலலிதாவுக்காகத் தேர்தல் பிரசாரம் - ராமதாஸ் குற்றச்சாட்டு

வெள்ளி, 19 ஜூன் 2015 (04:46 IST)
சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக காவல்துறை அதிகாரி ஒருவர் வாக்கு சேகரிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்
 
இது குறித்துப் பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:- 
 
சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெயலலிதாவை வெற்றி பெறச் செய்யத் தேவையான அனைத்து நடத்தை விதிகளும் காற்றில் பறக்கவிடப்படுகின்றன. இதை வரிசையாகப் பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது என்ற அளவுக்கு அங்கு விதிமுறைகள் மீறப்படுகின்றன. 
 
இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிடுகிறார் என்பதால் அந்தத் தொகுதியில் உள்ள அனைத்து சாலைகளும் புதிதாகப் போடப்பட்டன. கழிவு நீர் குழாய்களும், குடிநீர் குழாய்களும் இரவோடு இரவாக மாற்றப்பட்டுப் புதிய குழாய்கள் புதைக்கப்பட்டன. சாலை அமைக்கும் பணியில், காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டதுடன், அப்பணியைச் சென்னை மாநகரக் காவல்துறை உயர் அதிகாரி ஒருவரே நேரடிப் பார்வையில் அவலமும் நடந்தது. 
 
பொது மக்களின் நலனுக்காக இந்தப் பணிகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால், 4 ஆண்டுகளாக எதையும் கண்டு கொள்ளாமல் இருந்துவிட்டு அனைத்துப் பணிகளையும் இரவோடு இரவாகச் செய்து முடிப்பது ஏன்? என்பது தான் மக்கள் எழுப்பும் கேள்வி ஆகும். கடந்த 4 ஆண்டுகளாக அரசு செயல்படவில்லை என்பதற்கு ஆட்சியாளர்கள் அளித்த ஒப்புதல் வாக்குமூலமாகவே இதைப் பொதுமக்கள் பார்க்கிறார்கள். 
 
தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெயலலிதா வாக்காளர்களைச் சந்தித்து வாக்கு கேட்க இதுவரை வராத நிலையில், அவருக்காக 28 அமைச்சர்களும், 48 நாடாளுமன்ற உறுப்பினர்களும், 150 சட்டமன்ற உறுப்பினர்களும் மக்கள் பணியை மறந்துவிட்டு வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். 
 
அதிமுகவினர் என்ற முறையில் இவர்கள் கட்சிப்பணியாற்றுவதை விமர்சிக்க முடியாது. ஆனால், அரசிடம் ஊதியம் வாங்கும் காவல்துறை அதிகாரிகள் பலரும் அதிமுகக் கரை வேட்டி முதலமைச்சர் ஜெயலலிதாவுக்காகத் தேர்தல் பிரசாரம் செய்கின்றனர். 
 
சேலம் மாநகரக் காவல்துறையின் மேற்கு சரகக் குற்றப்பிரிவு உதவி ஆணையாளராகப் பணியாற்றி வரும் ஒரு அதிகாரி காலில் அடிபட்டதாகக் கூறி கடந்த 10 நாட்களாக மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார். வீட்டில் ஓய்வெடுத்து வருவதாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ள அவர், தற்போது இராதாகிருஷ்ணன் நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அதிமுகவினருடன் இணைந்து வாக்கு சேகரித்து வருகிறார். 
 
தேர்தல் நடத்தை விதிகளின்படி இது தவறு ஆகும். அதுமட்டுமின்றி 1973 ஆம் ஆண்டின் தமிழ்நாடு காவல்துறை சார்பு அதிகாரிகள் விதி எண் 18, 1973 ஆம் ஆண்டின் தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதி எண் 14 ஆகியவற்றின்படி காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றும் ஒருவர் அரசியல் பணியில் ஈடுபடுவது குற்றம் ஆகும். 
 
இவற்றின் அடிப்படையில், அதிமுகவுக்காகத் தேர்தல் பணியாற்றி வரும் காவல்துறை உதவியாளரை உடனே பணியிடை நீக்கம் செய்வதுடன், துறை ரீதியிலான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளத் தமிழக அரசுக்கு தேர்தல் ஆணையம் ஆணையிட வேண்டும். 
 
அதுமட்டுமின்றி, தன்னை அதிமுக நிர்வாகியாக வெளிக்காட்டிக் கொள்ளும் அந்தக் காவல்துறை அதிகாரி கடந்த காலங்களில் நடுநிலையான அதிகாரியாகப் பணியாற்றியிருக்க வாய்ப்பில்லை. 
 
எனவே, இனி வரும் காலங்களிலும் அவ்வாறு செயல்பட வாய்ப்பில்லை. எனவே, கடந்த காலங்களில் இவரது செயல்பாடுகள் எவ்வாறு இருந்தன? என்பது குறித்தும் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்