வீடு புகுந்து பெண்ணை பலாத்காரம் செய்த காவல்துறை ஆய்வாளருக்கு நீதிமன்றம் ஜாமீன்

செவ்வாய், 19 மே 2015 (16:43 IST)
திருச்சியில், வீடு புகுந்து பெண்ணை பலாத்காரம் செய்த காவல்துறை ஆய்வாளருக்கு, நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
 
திருச்சி கே.கே.நகர் இந்தியன் வங்கி காலனியை சேர்ந்த தங்கவேல் என்பவரது மகள் பரிமளா (35). இவருக்கும் கே.கே.நகர் காவல்நிலையத்தில், கடந்த 2011 ஆம் ஆண்டு ஆய்வாளராக பணியாற்றிய முருகேசன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
 
பின்பு, ஆய்வாளர் முருகேசன் நெல்லை மாவட்டம் சுரண்டை காவல் நிலையத்திற்கும், பின்பு, அங்கிருந்து கடலூருக்கும் மாற்றப்பட்டார்.
 
இந்நிலையில், கடந்த மாதம் 25 ஆம் தேதி, பரிமளா வீட்டுக்கு சென்ற காவல்துறை ஆய்வாளர் முருகேசன் அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
 
இதுகுறித்து திருச்சி கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பரிமளா புகார் கொடுத்தார். அதன் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
இந்த விவகாரத்தில், காவல் ஆய்வாளர் முருகேசன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திருச்சி மாநகர போலீஸ் ஆணையாளர் அலுவலகம் முன்பு பரிமளா உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
 
மேலும், கடந்த 15 ஆம் தேதி திருச்சி 2 ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், நீதிபதி அல்லி முன்பு பரிமாளா ஆஜராகி ரகசிய வாக்கு மூலம் அளித்தார்.
 
இந்நிலையில், கடலூர் மாவட்டம் ஊ.மங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த, காவல்துறை ஆய்வாளர் முருகேசனை விழுப்புரம் சரக டிஐஜி சுமித் சரண் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
 
இடை நீக்கம் செய்யப்பட்ட ஆய்வாளர் முருகேசன் திருச்சி 2 ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி முரளிதர கண்ணன் முன்பு சரணடைந்து, ஜாமீன் கோரினார்
 
அப்போது 15 நாள் திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டு ஜாமீன் வழங்கினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்