மேற்கு வங்க சுற்றுலாப் பயணிகளின் பேருந்து ராமநாதபுரம் அருகே தீப்பிடித்தது: குழந்தைகள் உட்பட 5 பேர் பலி

ஞாயிறு, 31 ஆகஸ்ட் 2014 (12:08 IST)
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வந்த சுற்றுலாப் பேருந்து ராமநாதபுரம் அருகே தீப்பிடித்து எரிந்ததில் 3 குழந்தைகள் உட்பட 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

மேற்கு வங்க மாநிலம், பங்கூரா மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 60 பேர் தமிழகத்துக்குப் பேருந்தில் சுற்றுலா வந்தனர். அவர்கள் ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்றனர்.

அதைத் தொடர்ந்து கன்னியாகுமரிக்கு புறப்பட்டனர். ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் திருப்புல்லானி அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென அந்தப் பேருந்தில் தீப்பிடித்தது.

அந்தத் தீ வேகமாக பேருந்து முழுவதும் பரவியது. இதனால் அந்தப் பேருந்தில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியேறினர். தகவல் அறிந்த ராமநாதபுரம் தீயணைப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

தீயணைப்புப் படையினர் போராடி தீயை அணைத்தனர். ஆனால் பேருந்தில் இருந்த 3 குழந்தைகள் உள்பட 5 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாயினர்.

11 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர். உடனே அவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சுற்றுலா பேருந்தில் இருந்த குளிர்சாதனப் பெட்டியில் தீ பிடித்ததால், இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்