தமிழகம் அமைதி பூங்காவாக இல்லை : ராமகோபாலன் கருத்து

வியாழன், 30 ஜூன் 2016 (10:06 IST)
தற்போதுள்ள நிலையில் தமிழகம் அமைதி பூங்காவாக இல்லை என்று இந்து முன்னணி நிறுவனத் தலைவர் ராம கோபாலன் கண்டனம் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
இதுபற்றி அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது “தற்போது பெண்கள் சுதந்திரமாக வெளியில் நடமாட முடியாத அளவுக்கு வன்முறை அதிகரித்துள்ளது. இதற்கு ஆங்கிலேயர் காலத்து கல்விமுறை தான் காரணம். எனவே கல்வி முறையில் மாற்றம் செய்து ஆன்மிகம், சமய கல்வி முறையை அமல்படுத்த வேண்டும்.
 
முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக கூறுவது ஏமாற்று வேலை. தமிழகம் அமைதி பூங்காவாக இல்லை.
 
தமிழகம் முழுவதிலும் கட்சி பேதமின்றி ரெளடிகள் கைது செய்யப்பட வேண்டும். சிலை கடத்தல் வழக்கில் சிறப்பாக செயல்பட்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு பாராட்டு தெரிவிப்பதுடன், விருது அளிக்க வேண்டும். 
 
வேலூர் மாவட்டம், ஆம்பூரில் கலவரம் நடைபெற்று ஒரு வருடமாகியும் கலவரக்காரர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சூறையாடப்பட்ட இந்துக்களின் கடைகளுக்கு நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும்.
 
தமிழகத்தில் உள்ள கோயில்களில் சுவாமி தரிசனம் செய்ய கட்டணம் வசூலிக்கப்படுவதை ரத்து செய்ய வலியுறுத்தி, வருகிற ஜூலை 17-ஆம் தேதி தமிழகம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என அவர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்