காலா படத்தை ரிலீஸ் செய்ய உதவுங்கள் - கன்னடர்களுக்கு கோரிக்கை வைத்த ரஜினி

புதன், 6 ஜூன் 2018 (10:34 IST)
தான் தவறாக எதுவும் பேசவில்லை. கர்நாடகாவில் காலா படத்தை ரிலீஸ் செய்ய உதவுங்கள் என கன்னட அமைப்புகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் கோரிக்கை வைத்துள்ளார்.

 
கர்நாடகாவில் 'காலா' படத்தை ரிலீஸ் செய்ய திரையரங்குகளுக்கு உத்தரவிட முடியாது என்று கூறிவிட்ட நீதிமன்றம், இருப்பினும் காலா படத்தை வெளியிடும் கர்நாடக தியேட்டர்களுக்கு அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று நேற்று மாலை உத்தரவிட்டது. 
 
ஆனால், காவிரி மேலாண்மை ஆணையம் வேண்டாம் என ரஜினி தெரிவிக்க வேண்டும் என்றும் அவ்வாறு தெரிவித்தால் 'காலா' படத்தை வெளியிட ஒத்துழைக்கின்றோம் என கன்னட திரைப்பட வர்த்தகசபை அறிவித்துள்ளது. 
 
காலா படத்தை கர்நாடகாவில் வெளியிடாமல் இருப்பதே நல்லது என கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். மேலும், காலா படத்திற்கு பாதுகாப்பு வழங்கக் கோரிய நீதிமன்றத்தின் நகல் இன்னும் எங்களுக்கு கிடைக்கவில்லை. இப்படத்திற்கு கர்நாடக வர்த்தகசபை மற்றும் திரைத்துறையினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எனவே, இப்படத்தை திரையிடாமல் இருப்பதே நல்லது. அப்படி வெளியிட்டால் அதனால் ஏற்படும் விளைவுகளை தயாரிப்பாளரே எதிர்கொள்ள வேண்டும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே, காலா படம் கர்நாடகாவில் வெளியாவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில், இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு. அணைகள் ஆணையத்தின் கட்டுப்பாடில் இருக்க வேண்டும் என நான் கூறினேன். இது தவறு எனக்கூறி கர்நாடகாவில் காலா படத்தை வெளியிட அனுமதி மறுப்பது ஏன் என்று புரியவில்லை. திரைப்பட வர்த்தகசபை என்பது தயாரிப்பாளர், வினியோகஸ்தர்கள் அனைவரும் சம்பந்தப்பட்டது.  யாரும் நஷ்டம் அடையக்கூடாது.
 
கர்நாடகாவில் வீம்புக்காக இப்படத்தை நாங்கள் ரிலீஸ் செய்யவில்லை. இப்படம் உலகம் முழுவதும் வெளியாகிறது. எனவே, படத்தை வெளியிட அனைவரும் உதவ வேண்டும்.  அவருக்கு என்ன அழுத்தம் இருக்கிறது என்பது எனக்குப் புரிகிறது. ஆனாலும், காலா படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி பாதுகாப்பு தருவார் என்ற நம்பிக்கை உள்ளது என அவர் கூறினார். 
 
அதன்பின் கன்னடத்தில் பேசிய ரஜினி “கன்னட சகோதரர்களே நான் எந்த தவறான கருத்தையும் கூறவில்லை. படம் பார்க்க வருபவர்களுக்கு தொந்தரவு செய்ய வேண்டாம். படத்தை ரிலீஸ் செய்ய உதவி செய்யுங்கள்” என அவர் பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்