ரஜினியின் பூர்வீகம் தமிழ்நாடுதான்: ஆதாரத்தை கண்டுபிடித்த காங்கிரசார்!

சனி, 24 செப்டம்பர் 2016 (16:55 IST)
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கர்நாடகாவை சேர்ந்தவர் எனவும், அவரது பூவீகம் மஹாராஷ்டிரம் எனவும் கூறுவர். அவர் கர்நாடகத்தை சேர்ந்தவர் என காவிரி உள்ளிட்ட பல முக்கிய பிரச்சனைகளில் அவரை இழுத்து விடுவர்.


 
 
இந்நிலையில் ரஜினியின் பூர்வீகம் தமிழகத்தின் கிருஷ்ணகிரி தான் என அங்குள்ள காங்கிரசார் ஆதாரங்களை கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆதாரங்களை கொண்டு முதல்வர் ஜெயலலிதாவுக்கு காங்கிரசார் கடிதம் ஒன்றை எழுதி உள்ளனர்.
 
அதில், ரஜினியின் தந்தை ரானேஜிராவ் மற்றும் அவரது தாயார் ராம்பாய் அவர்களின் முன்னோர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி வட்டத்திற்கு உட்பட்ட நாச்சிகுப்பம் கிராமத்தை பூர்வீகமாகக்கொண்டு வாழ்ந்தவர்கள். அவர்களின் பெயரில் ஆர்.ஆர். என்ற பெயரில் நினைவகம் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. இது ராகவேந்திரா அறக்கட்டளை மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.
 
மேலும் ரஜினியின் முன்னோர்கள் இங்கு வாழ்ந்ததற்காக ஆவணங்கள் கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி சார்பதிவகத்தில் உள்ளதாக காங்கிரஸ் கட்சியினர் குறிப்பிட்டுள்ளனர். எனவே ரஜினியை தமிழர் என அறிவிக்க வேண்டும் என அவர்கள் முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்