அதிமுகவில் ஒற்றைத் தலைமையை கொண்டு வருவது குறித்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் நிகழ்ந்து வருகிறது. சில நாட்கள் முன்னதாக நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இதுகுறித்த பேச்சால் பரபரப்பு எழுந்த நிலையில் எந்த வித தீர்மானமும் நிறைவேறாமல் பொதுக்குழு கூட்டம் முடிவடைந்தது. இதன் பின்னர் ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் ராஜன் செல்லப்பா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, தேர்தலின் போது தனது தொகுதியில் மட்டுமே பன்னீர்செல்வம் பிரச்சாரம் செய்தார். யாருக்காகவும் பிரச்சாரம் செய்யவில்லை. தென் மாவட்டத்துக்கு பன்னீர்செல்வம் எதுவும் செய்யவில்லை, செல்வாக்கு இருப்பதுபோல் மாயை உருவாக்குகிறார்.
அதிமுகவுக்கு வலிமையான தலைமை வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம். அதிமுகவினரை ஒருங்கிணைக்கும் தகுதி இல்லாதவர் பன்னீர்செல்வம். ஜூலை 11 ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமியை பொதுச் செயலாளராக அறிவிக்க உள்ளோம். ஒ.பன்னீர்செல்வம் மீது நாங்கள் அன்பு கொண்டவர்கள்.அவர் தவறான முடிவு எடுக்கும்போது சுட்டிக்காட்ட கடமைப்பட்டு உள்ளோம்.