மழை நிவாரணப் பணிகளில் அரசியல் தலையீடு கூடாது: ஜி.கே.வாசன் கோரிக்கை

திங்கள், 23 நவம்பர் 2015 (23:28 IST)
தமிழகத்தில் மழை நிவாரணப் பணிகளில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது என ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.


 

மயிலாப்பூர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட 700 குடும்பங்களுக்கு தமாகா சார்பில் குடை, மழை கோட், அரிசி, போர்வை மற்றும் மாணவர்களுக்கு எழுது பொருட்கள் ஆகியவை வழங்கப்பட்டன.
 
இது குறித்து, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் கனமழை காரணமாக சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் இயல்பு வாழ்க்கை திரும்பும் வரை அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் உடை, தங்குமிடம் ஆகியவற்றை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செய்துதர வேண்டும்.
 
தண்ணீர் மூலம் தொற்று நோய்கள் ஏற்படாமல் இருக்க 24 மணி நேர மருத்துவ சேவை அளிக்கவேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் இணைந்து வெள்ள நிவாரண உதவிகளை முறையாக வழங்க வேண்டும். இதில் அரசியல் தலையீடு கூடாது.
 
மேலும், மழை மற்றும் வெள்ள நிவாரண உதவிகள் வழங்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து கண்காணிப்பு குழுவை ஏற்படுத்த வேண்டும். இது போன்ற தருணங்களில் பொது மக்களுக்கு உதவுவது ஒவ்வொரு அரசியல் கட்சிகளின் தலையாய கடமை ஆகும். எனவே, அந்த வகையில் தமாகா சார்பில் ரூ.50 லட்சம் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.  
 

வெப்துனியாவைப் படிக்கவும்