மழை நிவாரணம்: பாமக தொழிற்சங்கத்தினர் ஒரு நாள் ஊதியம் வழங்க ராமதாஸ் கோரிக்கை

வெள்ளி, 20 நவம்பர் 2015 (22:52 IST)
மழை நிவாரணத்திற்கு, பாட்டாளி தொழிற்சங்கத்தினர்க ஒரு நாள் ஊதியத்தை கொடையாக வழங்க பாமக கோரிக்கை விடுத்துள்ளது.
 

 
இது குறித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் வெளிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
தமிழ்நாட்டில் சென்னை, கடலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் யூகிக்க முடியாத அளவுக்கு கொடுமையானவை.
 
இயற்கையின் இரக்கமின்மையும், அரசின் அலட்சியமும் தான் அத்தனை துயரங்களுக்கும் காரணம் என்ற போதிலும் பாதிக்கப்பட்ட தமிழ் சொந்தங்களுக்கு உதவி செய்யும் கடமையிலிருந்து நம்மால் ஒருபோதும் ஒதுங்கியிருக்க முடியாது.
தமிழகத்தை சுனாமி தாக்கிய போதும், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களைத் தானே புயல் தாக்கிய போதும் மனிதநேயத்துக்கு உதாரணமாக செயல்பட்டு உதவிகளை வாரி வழங்கியது நாம் தான். அதேபோல், பருவமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கை கொடுக்க வேண்டியதும் நமது கடமை ஆகும்.
 
அக்கடமையை நிறைவேற்றும் வகையில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்களும், பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களும் தங்களின் ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்குவார்கள்.
 
அதேபோல், பாட்டாளி தொழிற்சங்கத்துடன் இணைக்கப்பட்டுள்ள அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள், மின் வாரியத் தொழிலாளர்கள், கூட்டுறவு சங்கத் தொழிலாளர்கள், தனியார் நிறுவனப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவன பணியாளர்களும் தங்களது ஒரு நாள் ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்