யார் முதலமைச்சர் என்ற பிரச்சினையால் கூட்டணி அமைவதில் தாமதம் - தமிழிசை சவுந்தரராஜன்

திங்கள், 14 மார்ச் 2016 (11:35 IST)
தமிழகத்தில் 2014ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட தேசிய ஜனநாய கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள் மீண்டும் ஒன்று சேரவேண்டும் என்றும் யார் முதலமைச்சர் என்ற பிரச்சினையால் கூட்டணி அமைவதில் தாமதம் ஏற்பட்டு விட்டது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
 

 
நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் பாஜக சார்பில் வேட்பாளர் நேர்காணல் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மண்டலத்தில் திருச்சி புறநகர், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டது
 
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், ”இன்றைய சூழ்நிலையில் தமிழகத்தின் மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது ஊழல்தான். இந்த ஊழலை ஒழிக்க மாற்று சக்தியாக பாஜக உருவெடுத்து வருகிறது. ஊழலை ஒழிக்க பாஜகவால் மட்டுமே முடியும்.
 
தமிழகத்தில் 2014ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட தேசிய ஜனநாய கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள் மீண்டும் ஒன்று சேரவேண்டும். யார் முதலமைச்சர் என்ற பிரச்சினையால் கூட்டணி அமைவதில் தாமதம் ஏற்பட்டு விட்டது.
 
அந்தந்த கட்சிகளை சேர்ந்த தலைவர்கள்தான் முதலமைச்சர்களாக வரவேண்டும் என்பது தொண்டர்களின் ஆசையாக இருக்கலாம். ஆனால் பொது நோக்கமான ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த எல்லா கட்சிகளும் மீண்டும் இணையவேண்டும் என்பது தான் எங்களின் வேண்டுகோளாகும்.
 
பாஜகவிற்கு தமிழகத்தில் 19.5 சதவீத வாக்கு வங்கி உள்ளது. எனவே நாங்கள் தனித்து நிற்கவும் தயார்தான். ஆனால் எதிர் வாக்குககள் சிதறிவிடக்கூடாது என்பதற்காகத்தான் தேசிய ஜனநாயக கூட்டணி தொடரவேண்டும் என்று கூறுகிறோம்.
 
தேமுதிக தனித்து போட்டியிட போவதாக அறிவித்தது திமுக, காங்கிரஸ் கூட்டணிக்குத்தான் ஏமாற்றத்தை தந்துள்ளது. பாஜகவுக்கு அல்ல” என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்