பூசாரி தற்கொலை வழக்கு: ஓபிஎஸ் சகோதரர் ராஜாவுக்கு முன்ஜாமீன்!

புதன், 24 ஜூன் 2015 (14:47 IST)
பூசாரியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் முன்னாள் முதல்வரும், தற்போதைய அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ராஜாவுக்கு முன்ஜாமீன் வழங்க தேனி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
பெரியகுளம் அருகேயுள்ள தேவதானம்பட்டி கைலாசநாதர் கோயில் பூசாரி நாகமுத்து என்பவர் கடந்த 2012 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது, தமிழக நிதியமைச்சரான ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ராஜாவின் ‘டார்ச்சர்’ காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கடிதம் எழுதி வைத்து பூசாரி நாகமுத்து இறந்து விட்டார்.
 
இந்நிலையில், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஓ.ராஜா உள்பட 7 பேர் மீது தென்கரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் ராஜா உள்பட 7 பேர் மீது பெரியகுளம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 3 ஆம் தேதி குற்றப்பத்திரிகை  தாக்கல் செய்யப்பட்டது.
 
இதனிடையே, அதிமுக தலைமை உத்தரவின் பேரில் பெரியகுளம் நகராட்சி தலைவர் பதவியை ராஜா அண்மையில் ராஜினாமா செய்தார்.  இதைத் தொடர்ந்து பூசாரி நாகமுத்து தற்கொலை வழக்கில் ராஜாவை காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும், சென்னைக்கு அழைத்து வரப்பட்ட அவரிடம் ரகசிய இடத்தில் விசாரணை நடந்து வருவதாகவும் கடந்த மாதம் 28 ஆம் தேதி தகவல் வெளியானது.
 
இந்நிலையில், ஓ.ராஜா எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுவதால், முன்ஜாமீன் கேட்டு ராஜா, தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
 
இந்த மனு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. முன்ஜாமீன் கேட்ட ராஜாவும் காலை 8 மணிக்கெல்லாம் நீதிமன்றத்தில் ஆஜராகினார். ஒரு மணி நேரத்திற்கு பிறகு மனுவை விசாரித்த நீதிமன்றம், ராஜாவுக்கு முன்ஜாமீன் வழங்கியது.

வெப்துனியாவைப் படிக்கவும்