சமீபத்தில் பிரதமர் மோடி தமிழ் நாடு வருகை புரிந்தார். அப்போது, திருச்சி விமான விமான நிலையத்தை திறந்து வைத்ததுடன், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவிலும் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.
இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க திருச்சி வந்த பிரதமர் நரேந்திர மோடி, நடிப்பிலும் சரி, அரசியலிலும் சரி, தேச நலனுக்கு முன்னுரிமை அளித்தவர் விஜயகாந்த் எனவும் சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் கேப்டனாக திகழ்ந்தார் எனவும் புகழாரம் சூட்டினார்.
இதையடுத்து, தனது எக்ஸ் தளத்தில் இன்று பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, விஜயகாந்தின் மறைவால் ஏராளமான மக்கள் தாங்கள் ரசித்துப் போற்றிய நடிகரையும், பலர் தங்களது பாசத்திற்குரிய தலைவரையும் இழந்திருக்கிறார்கள்.
ஆனால் நான் எனது அன்பான நண்பரை இழந்துள்ளேன் எனவும் கேப்டன் குறித்த சில கருத்துக்களையும், அவரது சிறப்புகளையும் எழுதியிருக்கிறேன் எனவும் குறிப்பிட்டு, கட்டுரை ஒன்றையும் பிரதமர் மோடி எழுதியிருந்தார்.
இந்த நிலையில், பிரதமருக்கு நன்றி தெரிவித்து, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், கடுமையான பணிகளுக்கு இடையிலும், கடந்த 3 ஆம் தேதி மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பற்றி கடிதம் எழுதியதற்கும், பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், மாணவர்கள் மத்தியில்,அரசியல், சினிமா என இரண்டிலும் விஜயகாந்த் கேப்டனாக திகழ்ந்தார் என்று தெரிவித்த பிரதமர் மோடிக்கு இக்கடிதம் மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.