பிடிக்காத கணவருடன் வாழ்க்கை! குழந்தையை தண்ணீர் பேரலில் போட்டுக் கொன்ற தாய்!

Prasanth Karthick

செவ்வாய், 8 ஏப்ரல் 2025 (09:47 IST)

தனது கணவர் தன்னை விட குழந்தை மீது அதிக பாசம் வைத்ததால் குழந்தையை தாயே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகேயுள்ள கண்ணங்குடியை சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு லாவண்யா என்ற பெண்ணுடன் சமீபத்தில் திருமணமாகி ஆதிரன் என்ற 5 வயது ஆண் குழந்தையும் உள்ளது. ஆனால் ஆதிரன் பிறந்தது முதலே மணிகண்டன்- லாவண்யா இடையே அடிக்கடி மனஸ்தாபம், தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஒருநாள் சண்டை முற்றியதில் லாவண்யா கோபித்துக் கொண்டு புலியூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

 

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் லாவண்யா தனியாக இருந்தபோது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் தனது குழந்தை கழுத்தில் கத்தியை வைத்து தனது தாலி சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடிவிட்டதாக கூச்சலிட்டுள்ளார். அதைகேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தேடி பார்த்துள்ளனர். ஆனால் யாரையும் காணவில்லை. மேலும் குழந்தை எங்கே என தேடியபோது ஆதிரன் அங்கிருந்த தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கி இறந்து கிடந்துள்ளான்.

 

இந்த சம்பவம் அறிந்த போலீஸார் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது லாவண்யா பேச்சில் சந்தேகமடைந்த அவர்கள் அவரை துருவித்துருவி விசாரித்ததில் குழந்தையை நான் தான் கொன்றேன் என ஒப்புக் கொண்டுள்ளார். தனது கணவருடன் தன்னை சேர்த்து வைக்க குடும்பத்தினர் முயற்சித்து வந்ததாகவும், குழந்தை இருந்தால் அதை சொல்லியே கணவனுடன் சேர்த்து விடுவார்கள் என்பதால் குழந்தையை கொன்றதாகவும் கூறியுள்ளார். போலீஸார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ள நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்