ஆம்பூரில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற இளைஞர் மரணம்: பேருந்துகளுக்கு தீ வைப்பு - பதற்றம்

சனி, 27 ஜூன் 2015 (23:35 IST)
ஆம்பூரில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற இளைஞர் மரணம் அடைந்ததால், ஆவேசம் அடைந்த சிலர் பேருந்துகளுக்கு தீ வைத்தனர். காவல்துறை மீது கற்களை வீசி தாத்குதல் நடத்தினர். இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது.
 

 
 
வேலூர் மாவட்டம், ஆம்பூரில் வசித்து வரும் ஷமீல் என்ற இளைஞர், அவருடன் முன்பு பணியாற்றிய பெண் ஒருவருக்கு மனிதாபிமான அடிப்படையில் குடும்ப பிரச்சினையை தீர்க்க உதவியிருக்கிறார்.
 
இந்நிலையில் அந்தப் பெண் திடீரென மாயமான நிலையில், அதற்கு காரணம் ஷமீல்தான் என பள்ளிகொண்டா காவல்துறையினர் கடந்த 15ஐம் தேதி ஷமீலை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
 
காவல்நிலையத்தில் ஷமீலை வைத்து விசாரிக்காமல், வெளியிடத்தில் வைத்து கடுமையாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட ஷமீல் 19ஆம் தேதி ஆம்பூர் அரசு மருத்துவமனையிலும், 23ஆம் தேதி வேலூர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். 
 
ஆனால் ஷமீலின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததை அடுத்து, சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். சித்திரவதை எதிர்ப்பு தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்ட அன்று இந்த துயர சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. 
 
எனவே, இந்தக் கொலைக்கு காரணமான காவலர்கள் மீது உடனடியாக கொலை வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என ஆம்பூர்  காவல் நிலையத்தை முற்றுகையிட்டு முஸ்லீம் அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகளும், பொது மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 500க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல்துறையினர் அவர்களிடம் சமாதானம் செய்ய முயன்று தோல்வி அடைந்தனர். இதனால், கும்பலை கலைக்க தடியடி நடத்தினர்.
 
இதன் காரணமாக ஆவேசம் அடைந்த முஸ்லீம் மக்கள் பேருந்துகளின் மீது கற்களை வீசி தாக்கியதில் 20க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சேதமடைந்தன. மேலும் 2 கார்கள் மற்றும் ஒரு மினி பேருந்துக்கு தீ வைத்தனர். 
 
இஸ்லாமியர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதில் 20க்கும் மேற்பட்ட காவல்துறையினர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
 
பெரும் பதற்றம் காரணமாக, சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் நந்தகோபால் மற்றும் காவல்துறை ஐ.ஜி.மஞ்சுநாதா ஆகியோர் விரைந்து சென்று பார்வையிட்டு, அமைதி ஏற்பட தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்