அரிசிக்குப் பதில் பணம் – மூடப்படும் ரேஷன் கடைகள் ?

புதன், 12 டிசம்பர் 2018 (12:35 IST)
புதுச்சேரியில் ரேஷன் கடையில் இலவச அரிசி வழங்கப்படுவதற்குப் பதிலாக வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப் படுவதால் ரேஷன் கடைகளை மூடும் நிலைக்கு வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பாண்டிச்சேரி யூனியன் மொத்தம் 507 ரேஷன்கடைகள் இயங்கி வருகின்றன. இதில் மொத்தமாக 800-க்கும் மேல் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்குள்ள ரேஷன் கடைகளில் கடந்த சில வருடங்களாக இலவச அரிசி மட்டுமே விநியோகிக்கப்பட்டு வந்துள்ளது. அதுவும்  சமீபகாலமாக சரியாக விநியோகிக்கப்ப டவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் ரேஷன்கடையில் பணிபுரியும்  ஊழியர்களுக்கு ஒரு வருடத்திற்கும் மேலாக ஊதியமும் தரப்படவில்லை என போராட்டங்களும் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் தரப்பில் ‘ரேஷனில் இலவச அரிசியை சரியாக தருவதில்லை. இலவச அரிசி தரும் கோப்புக்கு ஆளுநர் அனுமதி தருவதில்லை என்று முதலில் ஆளுங்கட்சியினர் புகார் தெரிவித்தனர். அதேநேரத்தில் இலவச அரிசிக்கு பதிலாக பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கில் பணம் தருவதாக கோப்பு அனுப்பினால் அதற்கு ஆளுநர் உடனே அனுமதி தந்து விடுகிறார். அதனால் புதுச்சேரியில் இனி ரேஷன் கடைகள் இயங்குமா என்ற கேள்வி அனைவர் மனதிலும் உள்ளது. கடந்த தீபாவளிக்குக் கூட பயனாளர்களின் வங்கிக் கணக்கில் பணம்தான் செலுத்தப்பட்டது.’ என வருத்தம் தெரிவித்துள்ளனர்.

நியாய விலைக் கடை ஊழியர்கள் சார்பில் ‘எங்களுக்கு கிட்டத்தட்ட 18 மாதங்களாக சம்பளம் தரவில்லை. மொத்த ஊழியர்களும் பாதிப்பில் உள்ளனர்.. , முதல்வர், அமைச்சர், துறை அதிகாரிகள், கவர்னார் என எல்லோரிடமும் முறையிட்டு போராடிப் பார்த்து விட்டோம். ரேஷன் கடைகல்ளை மூடும் அபாயம் உள்ளதால்  ரேஷன்கடை ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருக்கிறோம். ஆனால் மாற்றுப்பணியும் வழங்காமல் ஊதியமும் தராமல் ரேஷன் கடைகளை வைத்துள்ளனர்.’ எனத் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்