பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதில் சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோரை கடந்த 25-ந் தேதி ஜோதி நகரில் போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு போலீசில் சிக்காமல் தலைமறைவானார். இதற்கிடையில் கடந்த 5-ந்தேதி தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசை போலீசார் மாக்கினாம்பட்டியில் வைத்து கைது செய்தனர்.
இந்த நிலையில் சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோருக்கு நேற்றுடன் 15 நாட்கள் காவல் முடிந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் நேற்று மீண்டும் பொள்ளாச்சி ஜே.எம்.1 மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி ஆறுமுகம் 3 பேருக்கும் மேலும் 15 நாட்களுக்கு காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார். இதையடுத்து சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய 3 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.