ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று தூத்துகுடியில் நடந்த போராட்டத்தின் போது வன்முறை வெடித்து அதனால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒரு பெண் உள்பட 11 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த சம்பவத்தால் சென்னை உள்பட தமிழகத்தின் பல நகரங்களில் போராட்டம் வெடித்தது.
இந்த நிலையில் சென்னையில் உள்ள மெரினா கடற்கரை மற்றும் டிஜிபி அலுவலக பகுதிகளில் சற்றுமுன் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு 3 இணை ஆணையர்கள் தலைமையில் 2000 போலீஸார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தூத்துக்குடி கலவரத்தையடுத்து மெரீனாவில் போராட்டலாம் நடக்கலாம் என்ற செய்தியின் அடிப்படையில் போலீஸ் பாதுகாப்பு அங்கு பலப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட தூத்துகுடியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் கலவரம் மற்றும் துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவக்குழு தூத்துக்குடி சென்றுள்ளதாகவும், மதுரை, நெல்லை, குமரி மாவட்டத்தில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் தூத்துகுடிக்கு விரைந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.