மாலிக் கூறியதை வெளியே கூறினால் உயிருக்கு ஆபத்து : பீதியை கிளப்பும் உயர் அதிகாரி

வியாழன், 14 ஜூலை 2016 (18:17 IST)
சுவாதி கொலை வழக்கில், இன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட, அவரின் நெருங்கிய தோழரான பிலால் மாலிக் கூறிய தகவல்கள் பற்றி உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
சுவாதி கொலை செய்யப்பட்டவுடன், அவர் பிலால் மாலிக் என்ற வாலிபரால் வெட்டி கொலை செய்யப்பட்டார் என்ற தகவல் பரவியது  ஆனால், சுவாதியின் நெருங்கிய நண்பராகிய அவரிடம் போலீசார் இதுவரை பெரிதாக விசாரணை ஏதும் நடத்தவில்லை என்று குற்றச்சாட்டும் எழுந்தது.  
 
சுவாதி வழக்கில், போலீசார் ராம்குமாரை கைது செய்வதற்கு உதவியாக இருந்தவர் பிலால் மாலிக் கொடுத்த முக்கிய தகவலும் ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது.
 
ராம்குமாரிடம் போலீசார் ஏற்கனவே விசாரணை செய்து வருகிறார்கள். அப்போது பிலால் மாலிக் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் முன்னுப் பின் முரணாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதனால், மாலிக்கை போலீசார் இன்று காலை சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக வரவழைத்தனர். அவர் தலையில் ஹெல்மெட்டுடன் காவல் நிலையத்திற்குள் நுழைந்தார். அங்கு அவரிடம் இரண்டு மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். 
 
அவரிடம் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது. ராம்குமார் பற்றி மாலிக்கிற்கு சுவாதி அனுப்பிய எஸ்.எம்.எஸ் பற்றி விரிவான விசாரணை நடத்தப்பட்டது என கூறப்படுகிறது. 
 
இந்நிலையில், இந்த விசாரணை குறித்து ஒரு உயர் போலீஸ் அதிகாரி கூறும்போது “ராம்குமார் பற்றி, பிலால் சில முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளார். அதன்படி, ராம்குமார்தான் சுவாதியை பின் தொடர்ந்து வந்துள்ளார் என்பது உறுதியாகி விட்டது. மேலும், இந்த வழக்கில் பிலால் முக்கிய சாட்சி என்பதால், அவர் கூறிய தகவல்களை வெளியே கூற முடியாது. அது அவரின் உயிருக்கு ஆபத்தாக முடியலாம். எனவே அவருக்கு உரிய போலீஸ் பாதுகப்பு வழங்கப்பட இருக்கிறது. வழக்கிற்கு முக்கியமான தகவல்களை பிலால் கூறியுள்ளார். அவை அனைத்தையும் நீதிமன்றத்தில் சமர்பிப்போம்” என்று கூறியுள்ளார்.
 
எல்லாம் சரி.. பிலால் மாலிக்கின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் எனில், யாரால் ஏற்படும்? என்பது பீதியை கிளப்பும் கேள்வியாகவே இருக்கிறது. சுவாதி வழக்கில் ஏராளமான மர்மங்களும், கேள்விகளும், சந்தேகங்களும் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்