சேலம், முள்ளுவாடி கேட் பகுதி ரயில் பாதையில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் மேம்பாலம் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி சமூக ஆர்வலர் பியுஷ் மனுஷ் கடந்த 8-ஆம் தேதி போராட்டம் நடத்தினார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதை அடுத்து, அவருடன் கைதான இருவருக்கு ஜாமின் வழங்கிய, நீதிமன்றம், இவருக்கு தர மறுத்த நிலையில், தற்போது, சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றம், பியுஷ் மனுஷுக்கு காலை, மாலையில் நீதிமன்றத்தில் ஆஜராகி 3 வாரம் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை ஜாமீன் அளித்துள்ளது.
இதைத் தொடர்ந்து, அவர் இன்று மதியம் சிறையிலிருந்து வெளியே வந்தார். அப்போது அவருக்காக காத்திருந்த மனைவியை பார்த்ததும் அவர் கதறி அழுதார். அப்போது பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர் “சிறைக்குள் என்னை 30 போலீசார் கடுமையாக தாக்கினர். எனக்கு நிகழ்ந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாது. சிறைத்துறை மீது நம்பிக்கை இழந்துவிட்டேன். அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். தனக்கு சிறையில் நடந்த கொடுமை பற்றி விரைவில் ஊடகங்களுக்கு தெரிவிப்பேன். எனக்கு ஆதரவாக இருந்த ஊடகங்களுக்கு நன்றி ” என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.