கார்டனில் நடந்த களோபரங்கள்...ஓ.பி.எஸ் பொங்கி எழுந்ததன் பின்னணி...

வெள்ளி, 10 பிப்ரவரி 2017 (14:28 IST)
தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை, சசிகலாவும், அவரின் உறவினர்களும் தொடர்ந்து அவமானப் படுத்தியதாலேயே அவர் தற்போது பொங்கி எழுந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
 

 
 
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் ஒ.பி.எஸ், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் சமாதி முன், கண்கள்  மூடியபடி அமைதியாக சுமார் 40 நிமிடங்கள் அமர்ந்திருந்தார். அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கொடுத்த பேட்டி, தமிழகத்தின் அரசியல் நிலவரத்தையே மாற்றிப் போட்டுள்ளது.
 
எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து அதிமுகவில் இருக்கும், அவைத் தலைவர் மதுசூதனனையே அடுத்த அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்க வேண்டும் என்பது ஜெ.வின் விருப்பமாக இருந்தது. ஆனால், தன்னை பொதுச்செயலாளராக நியமிக்கும் படி சசிகலா தரப்பு கூறியது, மேலும், நான் முதல்வராக இருக்கும் போதே, சசிகலாவை முதல்வராக்க வேண்டும் என தம்பிதுரை உள்ளிட்டோர் ஊடகங்களில் பேசியது தன்னை பெரிதும் காயப்படுத்தியது.. அதேபோல், கடந்த ஞாயிற்றுகிழமை, போயஸ்கார்டனுக்கு தன்னை அழைத்து, முதலமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யக் கோரி நிர்பந்தம் செய்தார்கள்.. அம்மா சமாதிக்கு சென்று, அவரிடம் அனுமதி கேட்டு விட்டு வருகிறேன் என நான் கூறினேன். ஆனால், அதற்கு அனுமதிக்காமல், என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதத்தை சசிகலா வாங்கினார் என ஓ.பி.எஸ் அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுகளை கூற தமிழகம் அதிர்ந்து போனது...


 

 
அதன்பின் நடந்தவை அனைத்தும் நமக்கு தெரியும் என்றாலும், ஞாயிற்றுக்கிழமை அன்று போயஸ் கார்டனில், சசிகலா தரப்பு தன்னை எந்த அளவுக்கு அசிங்கமாக நடத்தியது என்பது பற்றி ஓ.பி.எஸ் முழுவதுமாக ஊடகங்களில் கூறவில்லை. ஆனாலும், அது பற்றி பல அதிர்ச்சியான செய்திகள் ஊடகங்களில் வெளிவந்துள்ளது...
 
தமிழகத்தின் முதல்வராக இருந்தாலும், தன்னை சசிகலா தரப்பு சுதந்திரமாக செயல்படவில்லை என்பதை ஓ.பி.எஸ் உணர்ந்தே இருந்தார். மேலும், சசிகலாவே அடுத்த முதல்வர் என தம்பிதுரை உள்ளிட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் மூலம் ஊடகங்களில் கூற, சசிகலா தரப்பு வற்புறுத்தியதையும் அவர் புரிந்து கொண்டார். எனவே, முதல்வர் பதவியை கொடுத்து விட்டு, விலகுவதே அவரின் முடிவாக இருந்துள்ளது. 
 
அந்நிலையில்தான், சனிக்கிழமை இரவு அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட சசிகலா “நாளைக்கு வேறெங்கும் ஊர் சுற்றப் போய் விடாதே.. கார்டனுக்கு வா” என ஒருமையில் பேசியுள்ளார். முதல்வராக இருக்கும் தன்னை சசிகலா இப்படி இகழ்வாக பேசியும், ஏந்த கோபத்தையும் காட்டாமல், வருகிறேன் அம்மா என பவ்யமாக பதில் கூறி விட்டு, அடுத்த நாள் (ஞாயிற்றுக்கிழமை) போயஸ் கார்டன் சென்றுள்ளார் ஓ.பி.எஸ். அப்போதுதான், அவரிடம் ராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட கூறியிருக்கிறது சசிகலா தரப்பு. அம்மாவின் அனுமதி கேட்டு விட்டு வருகிறேன் என ஓ.பி.எஸ் கூற, ‘முதலில் கையெழுத்து போடு.. அப்புறம் உன் அம்மாவை போய் பாரு..’ என சசிகலா தரப்பு அதட்டியுள்ளது. உடனே ஓ.பி.எஸ் மேல்நோக்கி பார்த்துள்ளார். அப்போது, சசிகலாவோடு உடனிருந்த அவரின் தம்பி திவாகரன், ‘என்னய்யா பாக்குற... கையெழுத்த போடுயா..’ என ஏகத்துக்கும் எகிற, அவமானத்தோடு, கண்களில் கண்ணிர் சிந்திய படி கையெழுத்தை போட்டுள்ளார் ஓ.பி.எஸ்..


 

 
அதன்பின், ‘நானே இந்த பதவியிலிருந்து விலக முடிவெடுத்திருந்தேன். இப்போது நீங்களே அதை எடுத்துக் கொண்டீர்கள்..என்னை இவ்வளவு அவமானப் படுத்துகிறார்கள். அம்மாவை கேட்டே நான் எல்லா முடிவையும் எடுப்பேன். ஆனால், என்னை கட்டாயப்படுத்தி இப்படி ராஜினாமா வாங்குகிறீர்கள்” என சசிகலாவிடம் கூற, கோபமடைந்த சசிகலா “ அப்படியென்றால், பரிதாப்பட்டு நீங்கள் எனக்கு பதவியை விட்டுக் கொடுக்கிறேன் என்கிறீர்களா? என எகிறியுள்ளார்.
 
மேலும், அப்போது அங்கிருந்த சசிகலா உறவினர்கள், ஓ.பி.எஸ்-ஐ இழிவாக பேசி அவமானப் படுத்தியுள்ளார்கள். இருப்பினும், அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற எம்.எல்.ஏ கூட்டத்தில் கலந்து கொண்ட ஓ.பி.எஸ், சசிகலாவை சட்டமன்ற தலைவராக சசிகலாவை முன்மொழிந்துள்ளார். அதன் பின்னும் அவருக்கு அவமானங்கள் தொடரவே, கடந்த 7ம் தேதி, ஜெ.வின் சமாதிக்கு முன், கண்ணீர் வீட்டு அழுது, தனது மனக்குமுறலை ஜெ.விடம் கொட்டிவிட்டு, ஓ.பி.எஸ் விஸ்வரூபம் எடுத்தார் என ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்