தமிழகத்தில் பாமக ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு அமுல்படுத்துவோம்: அன்புமணி

செவ்வாய், 7 ஜூலை 2015 (05:07 IST)
தமிழக அரசு உடனே மதுவை ஒழிக்க வேண்டும். இல்லை எனில் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் நாங்களே பூட்டு போடுவோம் என பாமக முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி எச்சரிக்கை விடுத்தார்.
 

 
கோவில்பட்டியில் பாமக சார்பில் மது ஒழிப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாமக இளைஞரணி மாநிலத் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், "தமிழகத்தில் மதுவினால் ஆண்டுக்கு 2 லட்சம் பேர் உயிரிழந்து வருகின்றார்கள்.  தமிழகத்தில் மதுவினால் பெரும்பாலான குற்றங்கள் அதிக அளவில் நடைபெறுகிறது. குறிப்பாக, விபத்து, தற்கொலை என நாடே மதுவினால் சீரழிந்து வருகிறது. இந்தியாவிலேயே இளம் விதவைகள் அதிகமாகி வரும் மாநிலமாக தமிழகம் உள்ளது.
 
எனவே, தமிழக அரசு உடனே மதுவை ஒழிக்க வேண்டும். இல்லை எனில் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் நாங்களே பூட்டு போடுவோம்.
 
தமிழகத்தில் சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப நிதி இல்லை என்று தமிழக அரசு கூறுவது மிகவும் வேடிக்கையாக உள்ளது. சட்ட சபையில் எதிர் கட்சியே இல்லை என்ற நிலையை உருவாக்கி உள்ளனர்.
 
சட்ட சபையில் நடக்கும் அவலங்கள் வெளியே தெரியக் கூடாது என்பதாலே, நிதி இல்லை என்ற காரணத்தினை கூறி, உண்மையை மறைக்க முயற்சி செய்கின்றனர். அவர்களது கனவு வெகு காலம் பலிக்கப் போவதில்லை என்றார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்