சமீபத்தில் அமித்ஷா கொல்கத்தாவில் நடத்திய பேரணியின்போது வன்முறை வெடித்து ஈஸ்வர சந்திர வித்யாசாகர் சிலையும் அடித்து நொறுக்கப்பட்டது. இந்த சிலையை உடைத்தது பாஜகவினர் என்று மம்தா கட்சியினர்களும், மம்தா கட்சியினர்கள் தான் என்று பாஜகவும் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று உத்தரபிரதேசத்தில் நடந்த பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, 'மம்தாவின் கட்சி கலவரம் செய்யும் கட்சி என்றும் இந்த விஷயம் வித்யாசாகர் சிலையை உடைத்ததில் இருந்தே தெரிந்துவிட்டது என்றும், ஈஸ்வர சந்திர வித்யாசாகருக்கு பாஜக சார்பில் ஒரு புதிய சிலையை ஏற்பாடு செய்து அதே இடத்தில் நிறுவ ஏற்பாடு செய்யப்படும் என்றும் பேசினார்.
பிரதமர் மோடியின் இந்த பேச்சு மம்தாவை ரொம்பவே கடுப்பேற்றிவிட்டது. சிலையை உடைத்தது பாஜகவினர்கள் தான் என்பது குறித்து எங்களிடம் ஆதாரம் உள்ளது. இப்படி பொய் மேல் பொய் சொல்லிக்கொண்டே இருந்தால் மக்கள் முன் முட்டிபோட்டு தோப்புக்கரணம் போட வேண்டிய நிலை மோடிக்கு வரும்' என்று எச்சரித்துள்ளார். மேலும் பாஜகவினர் வித்யாசாகர் சிலையை நிறுவ வேண்டிய அவசியம் இல்லை என்றும் புதிய சிலை நிறுவ எங்களிடம் பணம் உள்ளது என்றும் அவர் மேலும் ஆவேசமாக கூறினார்.