இப்போது தேர்தல் நடத்தினால் ஓ.பி.எஸ்தான் முதல்வர் - 46 சதவீத மக்கள் ஆதரவு

வியாழன், 30 மார்ச் 2017 (12:07 IST)
தற்போது தேர்தல் நடத்தினால் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தையே தேர்ந்தெடுப்போம் என 46 சதவீத மக்கள் கருத்து தெரிவித்துள்ளதாக தந்தி தொலைக்காட்சி கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது.


 

 
ஜெ.வின் மரணத்திற்கு பின் தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள், திடீர் திருப்பங்கள் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் உருவாகியுள்ளது. இந்த சூழ்நிலையில் மக்களின் மனநிலையை தெரிந்து கொள்ள தந்தி தொலைக்காட்சி கருத்துக்கணிப்பு நடத்தி வருகிறது.
 
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 234 தொகுதியில் வசிக்கும் மக்களிடையே தனித்தனையாக சில கேள்விகள் முன் வைக்கப்பட்டு, அதன் முடிவுகளை அந்த தொலைக்காட்சி நேற்று வெளியிட்டது. அதில் முக்கியமாக, தற்போது பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால், முதல் அமைச்சர் பதவிக்கு உங்கள் தேர்வு யார்? என்ற கேள்விக்கு ஓ.பி.எஸ் தான் என 46 சதவீதமும், மு.க.ஸ்டாலின் 45 என சதவீதமும் கருத்து தெரிவித்தனர். இருவருக்குமான வித்தியாசம் ஒரே ஒரு சதவீதம்தான்.
 
இதில் முக்கியமாக, இதே கேள்வியை, திமுக வெற்றி பெற்ற 98 தொகுதி மக்களிடம் முன் வைத்த போது, மு.க.ஸ்டாலின் தான் என 50 சதவீதமும், ஓ.பி.எஸ் எண  46 சதவீத மக்களும் ஆதரவு தெரிவித்தனர். இதன் மூலம், திமுக வெற்றி பெற்ற தொகுதிகளிலும் ஓ.பி.எஸ்-ற்கு ஆதரவு பெருகியுள்ளது தெரியவந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்