ஓ.பி.எஸ்-ற்கு ஆதரவு ; சசிகலாவிற்கு எதிராக களம் இறங்கிய தந்தி டிவி?

செவ்வாய், 28 மார்ச் 2017 (13:02 IST)
சசிகலாவை எதிர்த்து அரசியல் செய்யும் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு 84 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.


 

 
ஜெ.வின் மறைவிற்கு பின் சசிகலா தரப்பிற்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் களம் இறங்கினார். அவருக்கு 12 எம்.எல்.ஏக்கள் மற்றும் 11 எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். அதன்பின் தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்கள் நிறைந்த அரசியல் நிகழ்வுகள் அரங்கேறின. இறுதியில், இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் அளவிற்கு அது சென்றுள்ளது. தற்போது ஆர்.கே.நகர் தொகுதியில் ஓ.பி.எஸ் அணி மற்றும் தினகரன் அணி இரண்டும் மோதுகிறது. 
 
இந்நிலையில், நேற்று இரவு தந்தி தொலைக்காட்சியில்  ‘மக்கள் யார் பக்கம்’ என்ற நிகழ்ச்சியில் சமீபத்திய அரசியல் நிகழ்வுகள் குறித்து தமிழகம் முழுவதும் உள்ள மக்களிடம் இருந்து சில கருத்துக் கணிப்புகள் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டது.
 
அதில் சசிகலாவிற்கு எதிராக ஓ.பி.எஸ் களம் இறங்கியதை வரவேற்பதாக 84 சதவீதம் பேரும், அது அதிமுகவிற்கு அவர் செய்த துரோகம் என 7 சதவீதம் பேரும், எந்த கருத்தும் இல்லை என 9 சதவீத மக்களும் கருத்து தெரிவித்திருந்ததாக செய்தி வெளியிடப்பட்டது.
 
அதேபோல், சசிகலாவிற்கு எதிராக ஓ.பி.எஸ் செயல்படுவார் என்பதை எதிர்பார்க்கவில்லை என 55 சதவீதம் பேரும், இது எதிர்பார்த்ததுதான் என 41 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்திருந்தனர். மேலும், தற்போதைய அரசியல் நிகழ்வுகள் கவலை அளிப்பதாக 74 சதவீதமும், எதிர்பார்த்த ஒன்று என 22 சதவீத மக்களும் கருத்து தெரிவித்ததாக அந்த தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.

இதுவரை சசிகலா தரப்பிற்கு ஆதரவாகவே தந்தி தொலைக்காட்சி செயல்படுவதாக பெரும்பாலானோரால் கருத்து கூறப்பட்டது. இந்நிலையில் இது போன்ற ஒரு கருத்துக்கணிப்பு முடிவு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்